2016-04-23 15:38:00

திருத்தந்தை:வத்திக்கான் வளாகத்தில் ஒப்புரவு அருளடையாளம்


ஏப்.23,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்குத் திடீரென வந்து, 16 வளர்இளம் பருவத்தினரிடம், ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒப்புரவு அருளடையாளத்தைக் கேட்டு, ஆயிரக்கணக்கான அவ்வயது சிறுவர் சிறுமியரை வியப்பில் ஆழ்த்தினார்.

இச்சனிக்கிழமையன்று வத்திக்கானிலும், உரோம் நகரிலும் மூன்று நாள் யூபிலி விழாவைத் தொடங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான வளர்இளம் பருவத்தினருக்கு, 150க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள், வளாகத்திலுள்ள தூண்கள் பகுதியிலும், மற்ற இடங்களிலும், படிக்கட்டுகளிலும், நாற்காலிகளிலும் அமர்ந்து ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இச்சனிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல், 12.45 மணி வரை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், நாற்காலியில் அமர்ந்து 16 இருபால் வளர்இளம் பருவத்தினருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார்.

 “இறைத்தந்தையைப் போன்று, இரக்கப் பண்பில் வளர்வதற்கு..” என்ற தலைப்பில், 13 வயதுக்கும், 16 வயதுக்கும் உட்பட்ட, ஏறக்குறைய எழுபதாயிரம் வளர்இளம் பருவத்தினர் வத்திக்கானிலும், உரோம் நகரிலும் தங்களின் இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளனர்.

இச்சனிக்கிழமை முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வத்திக்கான் புனிதக் கதவு வழியாகச் செல்லும் இவர்கள், வத்திக்கான் வளாகத்தில், ஒப்புரவு அருளடையாளத்தையும் பெறுகின்றனர்.

இச்சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணிவரை உரோம் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் பெரிய விழாவைச் சிறப்பிக்கின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்நிகழ்வில், இரவு 8.30 மணிக்கு, காணொளிச் செய்தி வழங்குகிறார்.

இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், ஏறக்குறைய எழுபதாயிரம் வளர்இளம் பருவத்தினருக்குத் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை.

வருகிற திங்கள் வரை நடைபெறும் இந்த யூபிலி விழாவில் கலந்துகொள்ளும் பல நாடுகளின் கத்தோலிக்க வளர்இளம் பருவத்தினருக்கு, உரோம் மறைமாவட்டத்தின் 207 பங்குகள் தங்கும் இட வசதிகளை அமைத்துக் கொடுத்துள்ளது.

மேலும், “அன்பு இளையோர் நண்பர்களே, உங்கள் பெயர்கள், இறைத்தந்தையின் இரக்கமுள்ள இதயத்தில் விண்ணில் எழுதப்பட்டுள்ளன. எனவே, துணிச்சலுடன், இக்கால அலைகளுக்கு எதிராகச் செல்லுங்கள்”என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.