2016-04-23 16:15:00

காலநிலை மாற்றத்தால் வற்றும் நீர்வளங்கள்


ஏப்.23,2016. உலகின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றில், 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ள நாள், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், தனது மகிழ்வை வெளிப்படுத்தியுள்ளார்.

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த ஒப்பந்தம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் உருவாக்கப்பட்டு, உலக பூமி நாளான ஏப்ரல் 22, இவ்வெள்ளியன்று, நியூயார்கில் கையெழுத்திடப்பட்டது.

இப்பூமியில் வாயுக்கள் வெளியேற்றத்தில் 55 விழுக்காட்டுக்குப் பொறுப்பான நாடுகளில் குறைந்தது 55 நாடுகள் கையெழுத்திட்ட முப்பது நாள்களுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையே, புவி வெப்பமடைவதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்ரிக்காவின் சாட் ஏரியின் பரப்பளவு கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொண்ணூறு விழுக்காடு சுருங்கிவிட்டது. ஒரு காலத்தில் உள்நாட்டுக் கடலாக வர்ணிக்கப்பட்ட சாட் ஏரி இன்று வெறும் குட்டைகளின் தொகுப்பாக சுருங்கிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

சாட், நைஜர், நைஜீரியா, காமரூன் ஆகிய நான்கு நாடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் சாட் ஏரி, சாஹெலில் இருந்த மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும்.

மேலும், இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான 91 நீர்த்தேக்கங்களில், நீர் கையிறுப்பின் அளவு வேகமாகக் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த நீர்நிலைகளில், தண்ணீரின் அளவு 22 விழுக்காடு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.