2016-04-23 14:37:00

உயிர்ப்புக் காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஏப்.23,2016. அமெரிக்காவின் Los Angeles நகரில், இருபது ஆண்டுகளுக்குமுன், Franky Carrillo என்ற 16 வயது இளைஞர், கொலைகுற்றம் சுமத்தப்பட்டு, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபின், அண்மையில் விடுதலைபெற்று, இயேசு சபையினர் நடத்தும் ஒரு கல்லூரியில் தற்போது அவர் சட்டப்படிப்பை ஆரம்பித்துள்ளார். 1992ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலையில் Frankyக்கு எதிராகச் சான்று பகர்ந்தவர்கள், 2011ம் ஆண்டு தாங்கள் கூறியது பொய் என்று ஒத்துக்கொண்டதால், Franky விடுதலை செய்யப்பட்டார். தான் செய்யாத ஒரு கொலைக்காக, 20 ஆண்டுகள் சிறையில் இருந்த Franky, சென்றவாரம் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், நமது ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கின்றன.

அவரிடம் பேட்டி எடுத்த நிருபர், "தவறாகத் தீர்ப்பிடப்பட்டு, 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது உங்களால் எப்படி நம்பிக்கை இழக்காமல் வாழ முடிந்தது?" என்று கேட்டார். அதற்கு, Franky: "சிறையில் இருந்த கைதிகள், அங்கு காவல் செய்த அதிகாரிகள் அனைவரும் நான் குற்றமற்றவன் என்பதை நம்பினர். அடிக்கடி அதை என்னிடம் கூறிவந்தனர். அதுதான் என்னை நம்பிக்கையுடன் வாழவைத்தது" என்று பதில் சொன்னார்.

சிறையிலிருந்த Frankyக்கு வெளியிலிருந்து உதவிகளும், ஆதரவும் வந்திருக்கும். சிறையில் அவரைச் சந்திக்கச் சென்ற பெற்றோரும், நண்பர்களும் அவருக்குக் கட்டாயம் நம்பிக்கை அளித்திருப்பர். ஆனால், அதைக் காட்டிலும், சிறைக்குள்ளிருந்து Franky பெற்ற நம்பிக்கையே அவருக்கு இன்னும் அதிக உதவியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறை என்ற நம்பிக்கையற்ற சூழலில் உருவான நம்பிக்கைக்கும், மாற்றங்களுக்கும் இதோ மற்றுமோர் எடுத்துக்காட்டு... கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டோரை கடுமையான காவலில் வைத்திருக்கும் Sing Sing சிறை நியூயார்க் நகரில் உள்ளது. (தற்போது இது, Ossining சிறை என்று அழைக்கப்படுகிறது.) 1921ம் ஆண்டு Lewis Lowes என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்கு சென்றார். 20 ஆண்டுகள் கழித்து, அவர் பணிஒய்வு பெற்றபோது, அச்சிறையில் அற்புதமான பல மாற்றங்கள் உருவாகியிருந்தன. இந்த மாற்றங்களுக்குக் காரணம் தன் அன்பு மனைவி Catherine என்று கூறினார் Lewis.

Lewis இச்சிறைக்கு பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி Catherineஇடம் அனைவரும் தந்த ஒரே அறிவுரை... எக்காரணம் கொண்டும் அவர் அந்தச் சிறைக்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்பதே. ஆனால், அவரோ, அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள், தன் அழகான மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். அவரைத் தடுக்க முயன்ற அனைவரிடமும் அவர் சொன்னது இதுதான்: “என் கணவரும், நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம். பதிலுக்கு, அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

விரைவில், Catherine கைதிகளிடம் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் ஒருவர் பார்வைத்திறன் அற்றவர் என்பதை அறிந்த Catherine, அவருக்காக Braille மொழியைக் கற்று, அதை அவருக்கும் சொல்லித்தந்து, Braille மொழியில் இருந்த பல புத்தகங்களை அவர் வாசிக்க உதவினார். மற்றொரு கைதி பேசவும், கேட்கவும் முடியாதவர் என்பதை அறிந்து, தான் சைகை மொழியைக் (Sign language) கற்றுக்கொண்டு, அவருடன் பல மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தார்.

Lewisம் Catherineம் Sing Sing சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937ம் ஆண்டு, Catherine ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே, ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் Catherine உடல் வைக்கப்பட்டிருந்தது. Catherine மரணத்தைப் பற்றி அறிந்த கைதிகள் அனைவரும், சிறையின் நுழைவாயிலுக்கருகே திரண்டு, மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி நின்றனர். வன்முறையில் இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் அனைவரும் Catherineக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுத் திரும்பலாம் என்று கூறினார். அனைவரும் அமைதியாக Catherine வீட்டுக்குச் சென்று, மரியாதை செலுத்தினர். மாலையில் ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர். ஒருவரும் தப்பித்துச் செல்லவில்லை. Catherine உடல், அந்தச் சிறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.

மாற்ற முடியாதவர்கள் என்று சமுதாயம் அடைத்து வைத்திருந்த அந்தக் கைதிகள் மத்தியில் தங்களையே முற்றிலும் இணைத்துக்கொண்டு, அவர்களுக்குள் மாற்றத்தை உருவாக்கிய Lewisம் Catherineம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? குற்றம் ஏதும் செய்யாமல், 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட Frankyயின் மனதில் நம்பிக்கையை அணையாமல் காத்த மற்ற கைதிகள் நமக்கு என்ன சொல்லித்தர விழைகின்றனர்? நம்பிக்கையற்றதாகத் தெரியும் ஒரு சூழலில், அச்சூழலுக்கு உள்ளிருந்து பிறக்கும் நம்பிக்கையே, சக்தி வாய்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணரும். இத்தகைய மாற்றங்களைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையும், மரணமும் மட்டுமே. உரோமைய அரசு, கிறிஸ்தவர்களை வேட்டையாடியது. கிறிஸ்தவர்களை மிருகங்கள் கிழித்து உண்பதைக் காண ஆயிரக்கணக்கான உரோமையர்கள் கூடிவந்து இரசித்தனர். இத்தகையக் கொடுமைகள் மத்தியில், கிறிஸ்தவர்களை வாழவைத்தது, அவர்கள் மத்தியில் உருவாகியிருந்த நம்பிக்கை… அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை.

அதிகாரத்தை நம்பி வாழ்ந்த உரோமைய அரசு இன்று இல்லை; ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறிஸ்தவ சமுதாயம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. இந்த நம்பிக்கைச் செய்தியை கிறிஸ்தவர்கள் பரிமாறிக்கொண்டது, இன்று நம்மிடையே புதிய ஏற்பாட்டு நூல்களாக உருவாகியுள்ளன.

புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்தும், திருவெளிப்பாடு நூலிலிருந்தும் நாம் இன்று கேட்கும் சொற்கள், நம்பிக்கையை வளர்க்கும் சொற்கள். இன்றைய இரண்டாம் வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஓர் அழகிய பகுதி. நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி.

உரோமைய அரசர் தொமிசியன் (Domitian) காலத்தில், எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் வேட்டையாடப்பட்டனர். புனித யோவானை பத்மோஸ் (Patmos) தீவுக்கு நாடுகடத்தினார் தொமிசியன். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறிஸ்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் நம்பிக்கைச் சொற்கள் இதோ:

திருவெளிப்பாடு 21: 1-5

பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன... அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்... பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை” என எழுது என்றார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. வேறு எதுவும் முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கவில்லை. அப்பம் பகிர்தலிலும், தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் கிறிஸ்தவர்களின் அடையாளம் அமைந்திருந்தது என்பதை திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது. அப்பம் பகிரும் அந்த அற்புத நிகழ்வை முதன் முதலாக கிறிஸ்து ஆற்றியபோது, சீடர்களுக்கு அவர் விட்டுச்சென்ற ஒரு முக்கிய கட்டளையை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகிறது:

யோவான் நற்செய்தி : 13: 34-35

இயேசு தம் சீடர்களிடம், “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார்.

அன்பை மையப்படுத்தி சொல்லப்படும் ஆயிரமாயிரம் கதைகளில், அண்மையில் என் கவனத்தைக் ஈர்த்த ஒரு கதை இது... 'Chicken Soup for the Soul' என்ற நூலில் காணப்படும் கதை இது...

உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் மிகுந்த அன்பு உண்டு. எனவே எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சிறுவன் சொன்னான்.

அன்பைப் பெறுவதற்குப் பதில், அன்பை அளிப்பது, அன்பளிப்பால் அடுத்தவரை நிறைப்பது, எவ்வளவோ மேல். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தலைசிறந்த வார்த்தைகளால் சொல்லிச் சென்றார்: “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொல்வதற்குப் பதில், உன்னதமான ஒரு சவாலை நமக்கு விட்டுச் சென்றார். “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.” இத்தகைய அன்பு வளரும் இடங்களில் நம்பிக்கையும் தானே செழித்து வளரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.