2016-04-22 15:05:00

கிறிஸ்தவர்க்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு துணிச்சல் தேவை


ஏப்.22,2016. தங்களின் உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு, கிறிஸ்துவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாக விளங்கிய திருத்தூதர்கள் போன்று, கிறிஸ்தவர்களும் இயேசு பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்குத் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, நற்செய்தி அறிவித்தல், பரிந்துபேசுதல், நம்பிக்கை ஆகிய மூன்று கூறுகளும், நற்செய்தியை அறிவிப்பதில் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று கூறினார்.

ஏப்ரல் 22, இவ்வெள்ளியன்று, அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றதன் 43ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 23, இச்சனிக்கிழமையன்று தனது திருமுழுக்குப் பெயர் விழாவையும் சிறப்பிக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இயற்பெயர் Jorge Mario Bergoglio என்பதாகும். ஏப்ரல் 23, மறைசாட்சி புனித ஜார்ஜ் திருவிழா.

நம் மீட்புக்காக, இறந்து, உயிர்த்த இயேசுவை அறிவிப்பதே, ஒரு கிறிஸ்தவரின் நற்செய்தி அறிவிப்பின் மையமாக விளங்க வேண்டும் என்றும், யூதர்கள் மற்றும் புறவினத்தார் முன்னிலையில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து திருத்தூதர்கள் ஆற்றியதும் இதுவே என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு வாழ்கின்றார், அவர் உயிர்த்துவிட்டார், நம் சமூகங்களில் நம்முடன் இருந்து, நம் பயணத்தில் நம்முடன் வருகிறார் என்று கிறிஸ்தவர்கள் அறிவிக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, பரிந்துபேசுதல் பற்றியும் மறையுரையில் விளக்கினார்.

இயேசு பற்றிய உண்மைகளை நாம் பார்க்கவும், கேட்கவும் தூய ஆவியார் நமக்குள்ளிலிருந்து நமக்கு உதவுகிறார் என்பதை விசுவாசத்தின் வழியாக கிறிஸ்தவர்கள் பார்க்க வேண்டுமென்றும், இறுதி இரவு உணவில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது போன்று, அவர் நமக்காகச் செபிக்கின்றார் மற்றும் ஆண்டவரின் வீட்டில் நமக்காக ஓர் இடத்தைத் தயார் செய்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், நம் ஆண்டவர் திரும்பி வருவார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கை பற்றியும் விளக்கிய திருத்தந்தை, எனது வாழ்வில் நான் எப்படி நற்செய்தி அறிவிக்கிறேன்?, எனக்காகப் பரிந்துபேசும் இயேசுவோடு எனக்குள்ள உறவு எப்படிப்பட்டது?, எனது சார்பாக, இறைத்தந்தையிடம் எனக்காக அவர் செபிக்கிறார் என்று நம்புகிறேனா?, இயேசுவின் நற்செய்தி அறிவிப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா? போன்ற கேள்விகளை, ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளுமாறும் விசுவாசிகளிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.