2016-04-21 16:07:00

வளர்இளம் பருவத்தினர் யூபிலி ஏப்ரல் 23-25


ஏப்.21,2016. சிறுவர், சிறுமியர் யூபிலியை முன்னிட்டு, உலகின் பல பகுதிகளிலிருந்து ஏறக்குறைய அறுபதாயிரம் வளர்இளம் பருவத்தினர் முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளனர் என்று, நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 23, வருகிற சனிக்கிழமை முதல், ஏப்ரல் 25 திங்கள்கிழமை வரை வத்திக்கானிலும், உரோம் நகரிலும் நடைபெறும் யூபிலி நிகழ்வுகளில், பல நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரம் வளர்இளம் பருவத்தினர் கலந்து கொள்கின்றனர்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள தூண்கள் பகுதியில், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறும் வசதிகளும், இரக்கத்தின் கூடாரங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

வருகிற சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் புனிதக் கதவிற்குச் செல்லும் திருப்பயணத்துடன், வளர்இளம் பருவத்தினரின் யூபிலி நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுக்கு யூபிலி திருப்பலி நிறைவேற்றுவார். இது, இந்த யூபிலியின் மாபெரும் நிகழ்வாக அமைந்திருக்கும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.