2016-04-21 15:11:00

கடவுள் ஆற்றும் செயல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்


ஏப்.21,2016. வாழ்வில் கடவுள் பிரசன்னமாக இருக்கும் பாதை மற்றும் சூழல்களை, நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் இவை, நம் விசுவாசத்தை ஆழப்படுத்த உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய வாசகங்களிலிருந்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், தங்கள் வாழ்வில், கடவுள் பிரசன்னமாக இருந்த அனைத்து முக்கிய தருணங்களையும், அடையாளங்களையும் நினைவுகளில் சேமித்து வைத்து, அவற்றைத் திரும்பிப் பார்ப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

கடவுள் ஆற்றிய அழகான செயல்களையும், அதேநேரம், நாம் எதிர்கொண்ட தடைகள் மற்றும் புறக்கணிப்புக்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால், கடவுள் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார் மற்றும் நம் தீய செயல்களைக் கண்டு அஞ்சுவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள், நம் இதயங்களிலும் மனங்களிலும் இருந்து, நம்மை எவ்வாறு மீட்டுள்ளார் என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும், திருஅவை, திருநற்கருணை அருளடையாளத்தை, ஒரு நினைவாக, எவ்வாறு விளக்குகிறது என்றும் விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை.

நினைவு, நம்மைக் கடவுளிடம் நெருக்கமாக அழைத்துச் செல்கின்றது என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மோடு என்றும், எவ்வேளையிலும் இருக்கிறார் என்றும் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.