2016-04-20 15:48:00

விளையாட்டு, நற்பண்புகளை, விழுமியங்களை உள்ளடக்கியது


ஏப்.20,2016. விளையாட்டு, பொதுவில் இடம்பெறும் ஒரு நிகழ்வு மட்டும் அல்ல, ஆனால், அது நற்பண்புகளையும் விழுமியங்களையும் உள்ளடக்கியது என்று, ஆஸ்ட்ரிய பனிச்சறுக்கு விளையாட்டு கூட்டமைப்பினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் காலை பத்து மணிக்கு, பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு, பொது மறைக்கல்வியுரை வழங்குவதற்கு முன்னர், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில் கூடியிருந்த நூறு ஆஸ்ட்ரிய பனிச்சறுக்கு கூட்டமைப்பினரைச் சந்தித்து இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இக்கூட்டமைப்பினரை முதலில் வாழ்த்திய பின்னர், இவர்கள் இளையோர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பணம், விடாமுயற்சி, மனவுறுதி, நேர்மை, தோழமை, குழு உணர்வு போன்ற விழுமியங்களை, விளையாட்டு குறித்து நிற்கின்றது என்றும் கூறினார்.

இக்கூட்டமைப்பினர், தங்களின் எடுத்துக்காட்டுகள் வழியாக, சமுதாயம் வடிவமைக்கப்படுவதற்கு உதவுகின்றார்கள் என்றும், விளையாட்டு, வரவேற்பு, சுற்றுச்சூழலையும், கடவுளின் படைப்பின் அழகையும் பாதுகாத்தல் ஆகியவற்றின் தூதுவர்களாக எப்பொழுதும் வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆஸ்ட்ரியாவின் இயற்கை வளத்தையும் புகழ்ந்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.