2016-04-20 16:18:00

இரக்கம் என்பது, புண்படுத்தப்பட தயாராக இருப்பது


ஏப்.20,2016. இரக்கம் என்பது, சில காசுகளைத் தர்மம் போடுவது மற்றும் நல்லவர்களாய் இருப்பது தவிர, பிறரால் புண்படுத்தப்படவும், தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் தயாராக இருப்பதுமாகும் என்று, மணிலா கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் கூறினார்.

பிறரிடம் இரக்கம் உள்ளவர்களாய் நடந்துகொள்ள நாம் விரும்பினால், இரக்கமுள்ளவராக இருந்த இயேசுவின் பாதையைப் பின்செல்ல வேண்டும் என்றும், பிறருக்கு, குறிப்பாக, சமுதாயத்தால் தாழ்த்தப்படுபவர்களுக்கு இரக்கத்தையும், பரிவன்பையும் காட்ட விரும்பினால், காயப்படுத்தப்பட தயாராக இருக்க வேண்டும் என்று, மனிலாவில் நடைபெற்ற ஒரு தியானக் கூட்டத்தில் கூறினார் கர்தினால் தாக்லே.

தாங்களாக முன்வந்து பிறருக்கு அன்பும் இரக்கமும் காட்ட விரும்புபவர்கள், தவறாகத் தீர்ப்பிடப்படவும், தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் நேரிடும் என்றும் எச்சரித்தார், அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தலைவரான கர்தினால் தாக்லே.

பல ஆண்டுகளாக நில அபகரிப்பு ஆட்களால் துன்புற்ற மக்களுக்கு ஆதரவாகவும், அந்த ஆட்களுக்கு எதிராகவும் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைச் சந்தித்துத் திரும்பியபோது, தான் ஒரு கம்யூனிசவாதி என்று குற்றம் சாட்டப்பட்டதையும் குறிப்பிட்டார் கர்தினால் தாக்லே.

ஆதாரம் : CBCP/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.