2016-04-19 16:12:00

பல்சமய காலநிலை மாற்றம் அறிக்கையில் இந்தியக் கர்தினால்கள்


ஏப்.19,2016. காலநிலை மாற்றம் குறித்த பல்சமய அறிக்கையில், மும்பைப் பேராயரும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், ராஞ்சிப் பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ உள்ளிட்ட 250 பல்சமயத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் ஒப்பந்தம், ஓரிரு நாள்களில் கையெழுத்திடப்படவுள்ளவேளை, இந்தியாவிலிருந்து இருபது சமயத் தலைவர்கள் உட்பட, ஐம்பது நாடுகளின் 250 பல்சமயத் தலைவர்கள், காலநிலை மாற்றம் குறித்த பல்சமய அறிக்கையில் இத்திங்களன்று கையெழுத்திட்டுள்ளனர்.

பாரிஸ் ஒப்பந்தம் குறித்த சமயத் தலைவர்களின் நேர்மறைக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாய் இந்தப் பல்சமய அறிக்கை உள்ளது எனச் செய்திகள் கூறுகின்றன.  உலக வெப்பநிலையை 1.5 செல்சியுஸ் டிகிரியைத் தக்க வைக்கும் நோக்கத்தில், வாயுக்கள் வெளியேற்றத்தை, 2020ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்துவதற்கு பாரிஸ் ஒப்பந்தம் பரிந்துரைக்கின்றது.

காலநிலை மாற்றம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் ஒப்பந்தம், ஏப்ரல் 22, பூமி தினத்தன்று, நியுயார்க்கில் கையெழுத்திடப்படவுள்ளது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் தலைமையில் நடைபெறும் இதில் இந்தியாவும் கையெழுத்திடும்.

ஆதாரம் : India Blooms / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.