2016-04-19 16:12:00

குடியேற்றதாரர் மீது திருத்தந்தை காட்டும் அன்புக்கு நன்றி


ஏப்.19,2016.  உலகின் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் குடியேற்றதாரர் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் ஒருமைப்பாட்டுணர்வுக்கு நன்றி தெரிவித்துள்ளது, ஐ.நா.வின் UNHCR புலம்பெயர்ந்தவர் நிறுவனம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவுக்குச் சென்று, புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்து, மூன்று குடும்பங்களைத் தன்னுடன் உரோமைக்கு அழைத்து வந்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட UNHCR நிறுவன இயக்குனர் Filippo Grandi அவர்கள், இது ஒருமைப்பாட்டுணர்வின் சக்திமிக்க வெளிப்பாட்டின் அடையாளம் என்று  தெரிவித்தார்.

துன்பமான சூழல்களிலிருந்து கட்டாயமாக வெளியேறும் பெருமளவான மக்கள், தடைச்சுவர்களையும், புறக்கணிப்புக்களையும், பயத்தையும் எதிர்கொள்ளும் இன்றைய உலகில், திருத்தந்தையின் இச்செயல், அரசுகளுக்கும், சமூகங்களுக்கும் தூண்டுதலாக அமைய வேண்டும் என்றும் கூறினார் Grandi.

இன்றைய உலகில், போர், கலவரங்கள் மற்றும் துன்புறுத்தலால், கட்டாயமாக வெளியேறியுள்ள ஏறக்குறைய ஆறு கோடிப் பேர் தங்கள் வாழ்வுக்காகப் போராடுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், புலம்பெயர்ந்தவர் எண்ணிக்கை தற்போது அதிகம். இவர்களில் ஏறக்குறைய இரண்டு கோடிப் பேர் அகதிகள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிறார் என்று ஐ.நா. கூறுகிறது.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.