2016-04-19 15:08:00

Astalli மையத்தின் பணிகளுக்கு திருத்தந்தை பாராட்டு


ஏப்.19,2016. புலம்பெயர்ந்தவர்களுக்கென, உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும்  Astalli மையத்தின் 35 ஆண்டுகாலப் பணிகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியிலுள்ள இயேசு சபை புலம்பெயர்ந்தவர் அமைப்பு வழியாக, உரோம் நகரில், கடந்த 35 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் இம்மையத்தின் பணி, ஒரே மக்களாக, எல்லாரும் ஒன்றுசேர்ந்து நடக்கும் பணி என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Astalli மையத்திலுள்ள புலம்பெயர்ந்தவர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்கள் மற்றும் நண்பர்களுக்கென காணொளிச் செய்தி ஒன்றை இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள திருத்தந்தை, இப்பணி, அழகானது மற்றும் நீதியானது என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தவர்கள், பல நேரங்களில் வரவேற்கப்படாமல் இருக்கின்றனர், இவர்களின் இருப்பு, சமுதாயத்தின் மனநிலையையும், வாழ்க்கைத்தரத்தையும் மாற்றுவதற்கு சவால் விடுகின்றது, இது சமுதாயத்தில் அச்சத்தை ஏற்படுத்தி, அம்மக்கள் புறக்கணிக்கப்படக் காரணமாகின்றது, சமுதாயத்தின் இந்தப் போக்கை மன்னிக்குமாறு புலம்பெயர்ந்தவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

புலம்பெயர்ந்தவர்களுடன் துணிச்சலுடன் உடன்நடந்து, அவர்களை வழிநடத்துமாறும், போரின் கசப்பான துர்நாற்றத்தை இவர்கள் அறிந்திருப்பதால், அமைதிக்கு இட்டுச்செல்லும் பாதைகளையும் அறிந்துள்ளனர் என்றும், திருத்தந்தை தனது காணொளிச் செய்தியில் கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.