2016-04-18 15:48:00

நம் வாழ்வு இயேசுவின் கரங்களில் முழுவதும் பாதுகாப்பாக உள்ளது


ஏப்.18,2016. நம் வாழ்வு, இயேசு மற்றும் இறைத்தந்தையின் கரங்களில் முழுவதும் பாதுகாப்பாக உள்ளது என்பதால், நாம் பயப்படத் தேவையில்லை என்று, விண்ணக அரசியே மனமகிழ்வாய் என்ற, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா பற்றிக் கூறும் தூய யோவான் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்காத எவரும், அவரைப் பின்செல்பவர் என்று கூற முடியாது என்று கூறினார். 

இந்தச் செவிமடுத்தல், மேலோட்டமாக நோக்கப்படக் கூடாது, மாறாக, இயேசு ஒருவரையே தாராளமாகப் பின்செல்லலாம் என்ற உண்மையானப் புரிதலுடன்  அமைதல் வேண்டும் என்றும், அவருக்குச் செவிசாய்ப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தம்மை நல்ல ஆயர் என்று விளக்கிய இயேசு, என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன, எனக்கும் அவற்றைத் தெரியும், அவையும் என்னைப் பின்தொடர்கின்றன என்று கூறியிருப்பது, இயேசுவின் குரலுக்கு ஒருவர் செவிசாய்க்கவில்லையெனில், அவர் இயேசுவைப் பின்செல்வதாகச் சொல்ல முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது என்றார் திருத்தந்தை.

இயேசு நம் ஒவ்வொருவருடனும் நெருங்கிய உறவை உருவாக்க விரும்புகிறார். அவர் நம் வழிகாட்டி, நம் ஆசிரியர், நம் நண்பர், நம் எடுத்துக்காட்டு. அவரே நம் மீட்பர், என் கரங்களிலிருந்து எவரும் என் மக்களைப் பறித்துக் கொள்ள முடியாது என்கிறார் இயேசு என்று மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு நம்மீது வைத்துள்ள அன்பை யாராலும் வெல்ல முடியாது என்றும், தீயவனான சாத்தான் நம்மிலிருந்து நித்திய வாழ்வைப் பறித்துக்கொள்ள முயற்சி செய்தாலும், நாம் நம் இதயக் கதவுகளைத் தீயவனுக்குத் திறக்காமல் இருக்கும்வரை அவனால் எதுவும் செய்ய இயலாது என்றும், இஞ்ஞாயிறு வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.