2016-04-18 15:55:00

திருத்தந்தை : லெஸ்போஸ் தீவில் அவ்வளவு வேதனைகளைப் பார்த்தேன்


ஏப்.18,2016. இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், கடந்த சனிக்கிழமையன்று தான் சென்ற லெஸ்போஸ் தீவுத் திருத்தூதுப் பயணம் பற்றிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அவ்வளவு வேதனைகளைப் பார்த்தேன் என்றார்.

லெஸ்போஸ் தீவில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் கிரேக்க மக்களுக்கு, திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்ததாகக் கூறிய திருத்தந்தை, கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் எரோணிமுஸ் ஆகிய இருவருடன் அங்குச் சென்றதாகவும் கூறினார்.

இத்திருத்தூதுப் பயணத்தில், செபத்தால் தனக்கு உதவிய எல்லாருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, அத்தீவிலுள்ள மோரியா முகாமுக்கு மூன்று கிறிஸ்தவத் தலைவர்களும் சென்றதை நினைவுகூர்ந்தார்.

ஆப்கானிஸ்தான், சிரியா, வட ஆப்ரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்தோம், இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறார், இவர்களில் பலர், தங்கள் பெற்றோர் அல்லது தோழர்களின் இறப்புகளை நேரிடையாகப் பார்த்தவர்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரு இளம் சிறாருடன் ஒரு முஸ்லிம் மனிதரைச் சந்தித்தேன், அவரின் மனைவி கிறிஸ்தவர் என்பதாலும், கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததாலும், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார், அத்தாய் ஒரு மறைசாட்சி என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெஸ்போஸ் தீவிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பியபோது, அங்கிருந்த மூன்று சிரியா நாட்டு முஸ்லிம் அகதிக் குடும்பங்களை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். ஆறு குழந்தைகள் உட்பட 12 பேர் வந்துள்ளனர். இரு குடும்பங்கள் தமாஸ்கு நகரையும், ஒரு குடும்பம் Deir Azzor நகரையும் சேர்ந்தவர்கள். இவர்களின் வீடுகள், குண்டுத் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளன. உரோம் சான் எஜிதியோ அமைப்பு, இவர்களுக்கு முதல் கட்ட உதவிகளை ஆற்றும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.