2016-04-18 10:27:00

உயிர்ப்புக் காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


வாசகங்கள்

I              திருத்தூதர் பணிகள் 13: 14, 43-52

II            திருவெளிப்பாடு 7: 9, 14-17

யோவான் நற்செய்தி 10:27-30

மாவீரன் அலெக்சாண்டர் ஒருமுறை தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தைக் கடக்கவேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். மன்னரின் தாகத்தை அறிந்த இரு தளபதிகள் பல இடங்களில் அலைந்து, அவ்வழியே சென்ற பயணிகளிடம் கெஞ்சி மன்றாடி, தங்கள் தலைக்கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அத்தளபதிகளின் விசுவாசத்தை அலெக்சாண்டர் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். அலெக்சாண்டர் கவசத்தைக் கையில் எடுத்தார். வீரர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று சொல்லியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர்.

ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக் கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப் பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே ஒருவராக இணைக்கும் விருப்பம் போன்ற பண்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. மாவீரன் அலெக்சாண்டரைப்பற்றி நாம் பகிர்ந்த இந்த நிகழ்வில், அவரது இளகிய, மென்மையான மனமும், வீரர்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொள்ளும் தியாகமும் தெளிவாகின்றன. உலகத் தலைவர்களிடம் இத்தகையப் பண்புகளை எதிர்பார்ப்பது செயற்கையானது, நடைமுறைக்கு ஒத்துவராது என்பது நமது உறுதியான எண்ணம். அரசியல் மற்றும் வர்த்தகத்தலைவர்கள், தலைமைத்துவத்தைப்பற்றி உருவாக்கித் தந்துள்ள தவறான இலக்கணம், இவ்விதம் நம்மை எண்ணத் தூண்டுகிறது.

உலகத் தலைவர்களிடம் காணப்படும் நிர்வாகத்திறமை, அறிவுக்கூர்மை போன்ற பண்புகளையே ஆன்மீகத் தலைவர்களிடம், மதத் தலைவர்களிடம், திருஅவைத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். தலைவர்களுக்குரிய பண்புகள் என்று மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற போக்கும் உருவாகி வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞாயிறு, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்றும் அழைக்கப்படுகிறது. நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள், என்ற இரு எண்ணங்களையும் இணைக்கும்போது, திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு உருவாக்கித் தருகிறது.

திருஅவையின் இன்றையத் தலைவர்களிடமும், நாளையத் தலைவர்களிடமும் நாம் எதிர்பார்க்கும், அல்லது எதிர்பார்க்க வேண்டிய பண்புகள் எவை என்பதை, கடந்த மூன்றாண்டுகளாக, தன் சொல்லாலும், செயலாலும், திருஅவைக்கு மட்டுமல்ல, உலகத் தலைவர்களுக்கும் பல வழிகளில் உணர்த்தி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் அனைத்து அரசியல் தலைவர்களைவிட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களிடையே அதிக நன்மதிப்பை பெற்றுள்ளார் என்று, கடந்த மாதம், புனித வியாழனன்று வெளியான ஒரு கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. WIN/Gallup International என்ற ஒரு நிறுவனம், 64 நாடுகளில், 1000க்கும் அதிகமான மக்களிடையே மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதம் என்ற எல்லையைத் தாண்டி, அனைத்து மதத்தினரிடையிலும், மத நம்பிக்கையற்றவர் நடுவிலும் நன்மதிப்பு பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மென்மையும், பணிவும் நிறைந்த அவரது பண்பே, உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மக்கள் மனங்களில் உயர்ந்ததோர் இடத்தில் அவரை வைத்துள்ளது என்பது, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை.

மூன்றாண்டுகளுக்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகப் பணியேற்ற நாளன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் பல்லாயிரம் மக்களும், பல உலகத் தலைவர்களும் இந்தப் பணியேற்புத் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். திருப்பலிக்கு முன், திறந்த ஒரு வாகனத்தில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம்நீட்டி அவரால் தொடமுடியவில்லை என்றாலும், அவரது செய்கைகளாலும், முகத்தில் வெளிப்படுத்திய உணர்வுகளாலும், அம்மக்களின் மனங்களைத் தொட்டார் என்பது தெளிவானது. ஓரிடத்தில், வாகனத்தை நிறுத்தச்சொல்லி, இறங்கிச்சென்று, அங்கிருந்த ஒரு மாற்றுத் திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, மக்கள் மத்தியில் ஆழ்ந்ததோர் தாக்கத்தை உருவாக்கியது.

அவர் மக்களைச் சந்தித்த அத்தனை தருணங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களைத் தொட்டு ஆசீர்வதிப்பதை, தன் சந்திப்பின் ஒரு முக்கிய செயலாகவே ஆற்றிவருகிறார். மூன்றாண்டுகளுக்கு முன், உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் வலம் வந்தபோது, மாற்றுத் திறனாளியான Dominic Gondreau என்ற 8 வயது சிறுவனை அணைத்து முத்தமிட்டது, பல கோடி மக்களின் மனதில் பதிந்த ஓர் அழகிய காட்சியாக அமைந்தது. "கடவுள் எங்கள் குடும்பத்தை அணைத்து அளித்த ஒரு முத்தமாக இதைக் கருதுகிறோம்" என்று Dominicகின் தாய் Christiana கூறியுள்ளார்.

2013ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில் 'அகில உலகக் குடும்ப நாள்' கொண்டாடப்பட்டபோது, மனநல வளர்ச்சி குன்றிய ஒரு சிறுவன், புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையுடன் செலவிட்ட மணித்துளிகள் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன என்பதை அறிவோம். கொலம்பியா நாட்டில் பிறந்த கார்லோஸ், என்ற இச்சிறுவன், பெற்றோரை இழந்தவன். உரோம் நகரில் ஓர் இத்தாலியக் குடும்பத்தில் வளர்ந்து வருபவன். அச்சிறுவனுடைய வளர்ப்புத்தாய் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திருத்தந்தையிடமிருந்து என் மகன் பெற்ற அசீர், அவனுக்கு மட்டும் கிடைத்த ஆசீர் அல்ல. ஆதரவு ஏதுமின்றி உலகில் விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் திருத்தந்தையின் ஆசீர் அன்று கிடைத்தது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்" என்று கூறினார்.

தன் இளகிய, மென்மையான மனதையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் செயல்வழி வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், தலைமைப் பணியின் இலக்கணத்தை வரையறுத்தார். தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதைத் தெளிவாக்கினார். தலைவர், இளகிய, மென்மையான மனம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இதோ, திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது. பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.

அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, இவ்வாண்டு சனவரி மாதம் ஒரு நூலாக வெளியிடப்பட்டது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் வெளியான இந்நூலுக்கு, 'இறைவனின் பெயர் இரக்கம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு முந்தையத் திருத்தந்தையர்களில் ஒருவரான, முதலாம் ஜான் பால் அவர்களைப் பற்றி கூறும் ஒரு கருத்து, திருஅவையின் தலைவர்கள், மனதில் பதிக்கவேண்டிய கருத்தாகத் தெரிகிறது.

திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்கு, தனக்கு எவ்வகையிலும் தகுதியில்லை என்பதை, ஆல்பினோ லூச்சியானி என்றழைக்கப்படும் திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், ஓர் அழகிய உருவகத்துடன், ஒரு மறையுரையில் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நூலில் நினைவு கூர்ந்துள்ளார்:

"ஆல்பினோ லூச்சியானி அவர்கள் வழங்கிய ஒரு மறையுரையில் தன்னைப் பற்றி பேசியது, எனக்கு நினைவிருக்கிறது. ஒரு சில விடயங்களை, செப்புத் தகட்டிலோ, பளிங்குக் கல்லிலோ எழுதுவதற்குப் பதில், தூசியில் எழுதுவதை, இறைவன் விரும்புகிறார். அவ்விதம் எழுதுவது நிலைத்து நின்றால், அது, தூசியின் சக்தியால் அல்ல, மாறாக, இறைவனின் சக்தியால் என்பது மிகத் தெளிவாகப் புரியும். உரோமையின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான்பால் அவர்கள், தன்னை 'தூசி'க்கு ஒப்புமைப்படுத்தியுள்ளார்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திருஅவையின் தலைவராக 33 நாட்களே பணியாற்றிய திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், ஓர் உன்னத மனிதராக, பணிவும், பண்பும் நிறைந்த தலைவராக மக்களால் போற்றப்படுபவர். நல்லதொரு மேய்ப்பராக விளங்கிய அவரைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள வார்த்தைகளை, நல்லாயன் ஞாயிறன்று மீண்டும் நினைவில் பதிப்பது, நமக்கு நல்லது.

நல்லாயன் ஞாயிறன்று, நல்ல ஆயராக தன் வாழ்வாலும், மரணத்தாலும் சான்று பகர்ந்த ஓர் அருள் பணியாளரின் எடுத்துக்காட்டுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா, அமெரிக்க இராணுவத்தில் மிக உயரிய விருது ஒன்றை, மறைந்த அருள் பணியாளர் Emil Kapaun அவர்களுக்கு வழங்கினார். வீரத்துடன் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி, வெற்றிபெறும் வீரர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் விருது இது. ஆனால், தன் இராணுவப் பணியில் ஒரு நாளும் ஆயுதங்களைப் பயன்படுத்தாத அருள் பணியாளர் Emil Kapaun, கோரிய போரில், வீரர்கள் மத்தியில் ஆற்றிய ஆன்மீகப் பணிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வில், அரசுத்தலைவர் ஒபாமா தன் உரையில் கூறியது இதுதான்: "துப்பாக்கியால் ஒரு முறை கூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் கௌரவப்படுத்துகிறோம். அருள் பணியாளர் Emil Kapaun இராணுவத்தில் பணியாற்றியபோது பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு - தன் நண்பருக்காக உயிரைத் தந்த அன்பு" என்று கூறினார் ஒபாமா.

ஏப்ரல், மே மாதங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசு விடுக்கும் இறை அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.