2016-04-18 15:59:00

ஈக்குவதோர், ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானவர்க்குச் செபம்


ஏப்.18,2016. ஈக்குவதோர் மற்றும் ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, தனது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், இதனைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனே அவர்களுக்கு வலிமையும், ஆறுதலுமாக இருப்பாராக என்றும் கூறினார்.

இன்னும், குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கான அழைத்தலுக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வருகிற ஜூன் மாதம், முதல் மூன்று நாள்களில் நடைபெறவுள்ள யூபிலியில், எல்லா அருள்பணியாளர்களும், குருத்துவ மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

வத்திக்கான் வளாகத்தில் தனது உரையைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றும் அனைத்து இளையோர், சிறுவர், சிறுமியர், ஆண்டவர் அவர்களை இறையழைத்தலுக்கு அழைப்பது பற்றிச் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.58 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 260க்கும் அதிகமாகியுள்ளது. மேலும், 2,500 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பலர் இறந்துள்ளனர். 2,50,000 பேர், சொந்த இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.