2016-04-16 16:29:00

லெஸ்போஸ் தீவு – ஒரு முன்னோட்டம்


ஏப்.16,2016. ஏஜியன் கடலின் வடகிழக்கே, மத்திய தரைக் கடலின் கிழக்கில் அமைந்துள்ள கிரேக்க நாட்டுத் தீவான லெஸ்போஸ், மனிதகுலத்தின் முதல் தொட்டில்களில் ஒன்றாகும். இதன் தலைநகர் Mytilene. சில நேரங்களில் இத்தீவு, Mytilene என்றே குறிப்பிடப்படுகிறது. 1,632 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட லெஸ்போஸ் தீவு, 320 கிலோ மீட்டர் நீள கடற்கரையையும் கொண்டுள்ளது. கிரேக்க நாட்டின் மூன்றாவது பெரிய தீவாகிய லெஸ்போஸ் பற்றிக் குறிப்பிடும் கிரேக்க எழுத்தாளர்கள், கி.மு.11ம் நூற்றாண்டில் Penthilidae என்ற குடும்பத்தினரால் Mytilene உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். கி.மு.590க்கும் 580க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற பெரிய கிளர்ச்சிவரை, அக்குடும்பத்தினர் அத்தீவை ஆட்சி செய்தனர். பின்னர், பைசான்டைன் உட்பட பல்வேறு அரசுகள் இத்தீவை ஆட்சி செய்தன. 1462ம் ஆண்டில் இத்தீவைக் கைப்பற்றிய ஒட்டமான் பேரரசு, 1912ம் ஆண்டில் முதல் பால்கன் போர் வரை ஆட்சி செய்தது. 1912ம் ஆண்டில் லெஸ்போஸ் தீவு கிரேக்க அரசின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. மாவீரர் அலெக்சாண்டர், சின்ன ஆசியாவைக் கைப்பற்றத் தொடங்கியவுடன், லெஸ்போஸ் மக்கள் பேரரசருடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இத்தீவு, பல்வேறு புகழ்பெற்ற மனிதர்களின் பிறப்பிடமாகும். மத்திய கிழக்குப் பகுதி நாடுகளில் இடம்பெறும் போர், அச்சுறுத்தல், துன்புறுத்தல், வறுமை போன்ற காரணங்களால் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள், ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு லெஸ்போஸ் தீவுக்குச் செல்கின்றனர். இம்மக்கள், ஜெர்மனிக்கும், சுவீடனுக்கும் செல்வதைத் தடுப்பதற்காக, பால்கன் நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியிருப்பதால், தற்போது, 52 ஆயிரம் பேர் கிரேக்க நாட்டில் உள்ளனர். 12 ஆயிரம் சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்தவர்கள், கிரேக்கத்திற்கும் மாசிடோனியாவுக்கும் இடையேயான வடக்கு எல்லையில் சிக்கியுள்ளனர். 2011ம் ஆண்டில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் இறந்துள்ளனர். ஐம்பது இலட்சம் சிரியா நாட்டினர், தங்களின் சொந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.