2016-04-16 15:52:00

திருத்தந்தையின் லெஸ்போஸ் தீவு திருத்தூதுப் பயணம்


ஏப்.16,2016. "புலம்பெயர்ந்தவர்கள் எண்கள் அல்ல, அவர்கள், முகங்களையும், பெயர்களையும், கதைகளயும் கொண்டவர்கள், அவ்வாறு முறையாக நடத்தப்பட வேண்டியவர்கள்" என்ற டுவிட்டர் செய்தியை இச்சனிக்கிழமை காலையில் பதிவுசெய்து, லெஸ்போஸ் தீவுக்கு, ஒருநாள் திருத்தூதுப் பயணமாகப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். கிரேக்க நாட்டுத் தீவான லெஸ்போஸில், உடலளவிலும், ஆன்மீகளவிலும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், இச்சனிக்கிழமை காலை 7.20 மணியளவில், A320 ஆல்இத்தாலியா விமானத்தில், உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து Mytilene பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார் திருத்தந்தை. ஏப்ரல் 16,  இச்சனிக்கிழமையன்று தனது 89வது பிறந்த நாளைச் சிறப்பித்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, நல்வாழ்த்தைத் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியதோடு, தான் கடந்து செல்லும் அல்பேனிய நாட்டிற்கும், இன்னும், இத்தாலி, கிரேக்க நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கும் தனது செபங்களையும், ஆசிரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார். திருத்தந்தையின் இந்தத் தந்திச் செய்திக்கு, நன்றி தெரிவித்து, பதில் அனுப்பிய இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள், ஐரோப்பாவில் அமைதியையும், நம்பிக்கையையும் தேடும், புலம்பெயர்ந்த மக்களுக்கு, திருத்தந்தையின் இப்பயணம் நம்பிக்கையை அளிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

லெஸ்போஸ் தீவின் தலைநகர் Mytilene, பன்னாட்டு விமான நிலையத்தை இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அவரை, கிரேக்கப் பிரதமர் Alexis Tsipras, கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவரும், ஏத்தென்ஸ் பேராயருமான 2ம் Hieronimus, கிரேக்க கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கப்புச்சின் சபையைச் சேர்ந்த பேராயர் Fragkiskos Papamanolis ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் கிரேக்கப் பிரதமர் Alexis Tsipras அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார். கிரேக்க நாடு, புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றி வரும் உதவிகளைப் பாராட்டி, இந்நாடு உலகுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது என்று கூறினார் திருத்தந்தை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கும் சென்று இத்தகைய மக்களைப் பார்த்தேன் என்றார் திருத்தந்தை. இச்சந்திப்புக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் பேராயர் 2ம் Hieronimus ஆகிய மூன்று தலைவர்களும், விமான நிலையத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, Mòria புலம்பெயர்ந்தவர் முகாமுக்கு, சிறிய வாகனத்தில் சென்றனர். ஏறக்குறைய 2,500 புலம்பெயர்ந்தவர்கள் வாழும் இம்முகாமில், நுழைவாயிலில், ஏறக்குறைய 150 இளம் புலம்பெயர்ந்தவர்கள் அணிவகுத்து நின்றனர். அவர்களின் வரவேற்பில் மகிழ்ந்து, அம்முகாமில் அமைக்கப்பட்டிருந்த பெரிய கூடாரம் சென்றனர். அங்கு ஏறக்குறைய 250 பேரை, ஒவ்வொருவராக வாழ்த்தினர். அம்மக்கள் திருத்தந்தையின் கரங்களைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதனர். அந்த முகாமில், பேராயர் 2ம் Hieronimus அவர்கள் உரையைத் தொடங்கினார். அப்போது உள்ளூர் நேரம் பகல் 12 மணி 25 நிமிடங்களாகும். முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய இரு தலைவர்களும் உரையாற்றினர்.

பின்னர், இம்மூன்று தலைவர்களும் சேர்ந்து ஒரு பொதுவான அறிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர், அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் சிறிய பேருந்தில் சென்று, புலம்பெயர்ந்த மக்களுடன் மதிய உணவருந்தினர். அதன் பின்னர் Mytilene நகர் குடிமக்களையும் கத்தோலிக்க சமூகத்தையும் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மூன்று கிறிஸ்தவத் தலைவர்களும் உயிரிழந்த புலம்பெயர்ந்த மக்களுக்காகச்  செபித்தனர். உயிரிழந்துள்ள புலம்பெயர்ந்த மக்களின் நினைவாகக் கடலில் போடுவதற்கென மூன்று சிறார் மலர்வளையங்களை அளித்தனர். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தலைவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார். மாலை 3.15 மணிக்கு, Mytilene பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலை 4.30 மணியளவில் உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் லெஸ்போஸ் தீவுக்கான, ஆறு மணி நேரத் திருத்தூதுப் பயணம் நிறைவடைந்தது. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், துன்புறும் புலம்பெயர்ந்த மக்களை நேரில் பார்த்து, ஆறுதல் கூறி, கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையையும் ஊட்டி வந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். உரோம் நகருக்குத் திரும்பியபோது, லெஸ்போஸ் தீவிலிருந்த மூன்று சிரியா நாட்டு அகதிக் குடும்பங்களை தன்னுடன் அழைத்து வந்துள்ளார் திருத்தந்தை. ஆறு குழந்தைகள் உட்பட 12 பேர் வந்துள்ளனர். இவர்கள் எல்லாருமே முஸ்லிம்கள். இரு குடும்பங்கள் தமாஸ்கு நகரையும், ஒரு குடும்பம் Deir Azzor நகரையும் சேர்ந்தவர்கள். இவர்களின் வீடுகள் குண்டுத் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ளன. உரோம் சான் எஜிதியோ அமைப்பு, இவர்களுக்கு முதல் கட்ட உதவிகளை ஆற்றும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். மேலும், இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புதிய அருள்பணியாளர்களைத் திருப்பொழிவு செய்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.