2016-04-15 15:07:00

பொறுப்புணர்வும் அக்கறையும், நம்மிடம் எதிர்பார்க்கப்படுபவை


ஏப்.15,2016. உண்மையான வளர்ச்சியின் அர்த்தத்தைப் புரிந்து, பொருளாதாரத்தை பொறுப்புணர்வுடன் நிர்வகிக்க நாம் ஒவ்வொருவரும் அழைப்புப் பெற்றுள்ளோம் என்றார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

திருத்தந்தையின் 'லவ்தாத்தோ சி’ என்ற மடலின் ஒளியில், நீடித்த நிலைத்த வளர்ச்சித் திட்டங்கள் என்பது குறித்து உரோம் நகரில் இடம்பெறும் கருத்தரங்கில் இவ்வெள்ளி காலை தலைமையுரை நிகழ்த்திய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இயற்கை வளங்கள் அனைவருக்கும் பயன்படும்படியாக முன்வைக்கப்பட வேண்டும், தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது என்பது, ஏழைகளையும் இயற்கையையும் சுரண்டுவதற்கு ஒப்பாகும், இலவசமாக கொடுக்கப்பட்ட இயற்கையை நம் வருங்கால சந்ததியினர்க்காக, மேலும் வளமுள்ளதாக மாற்றவேண்டியது நம் கடமை என்ற தலைப்புகளில் உரையாற்றினார்.

நிதி நிர்வாகத்தில் நம் ஒவ்வொருவரின் பொறுப்புணர்வையும் வலியுறுத்திய கர்தினால், மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறைகள் உருவாவது நம்பிக்கைத் தருவதாக உள்ளது என்றார்.

இயற்கையை பராமரிப்பவர்கள் என்ற நிலையையும் தாண்டி, அதில் அக்கறையுடையவர்கள் என்பது நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும் எனவும் விண்ணப்பித்தார் கர்தினால் டர்க்சன். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.