2016-04-15 15:55:00

டில்லி - எல்லா விதமான புகையிலைப் பொருட்களுக்கும் தடை


ஏப்.15,2016. டில்லியில் பான் மசாலா, குட்கா, ஜர்தா உள்ளிட்ட, மென்று சாப்பிடும் அனைத்து வகையிலான புகையிலைப் பொருட்களை விற்பதற்கும், சேமித்து வைப்பதற்கும், தயாரிப்பதற்கும் தடை விதித்து டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ள, இந்தத் தடை, அடுத்த ஓராண்டிற்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொது மக்களின் நலன் கருதி, பாக்கெட் செய்யப்பட்ட அல்லது உதிரியான, மென்று சாப்பிடும் வகையிலான புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம், அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில், அனைத்து வகையிலான புகையிலை பொருட்களுக்கும் தடை விதித்து டில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் புதிய தடை உத்தரவு தொடர்பாக டில்லி அரசின் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் Satyendra Jain அவர்கள் கூறுகையில், வாய்ப் புற்றுநோயால் ஆண்டுக்கு, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறக்கின்றனர் என்றும், மக்களின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

புகையிலைப் பொருட்களைத் தயாரித்தாலோ, தேக்கி வைத்திருந்தாலோ, விநியோகம் அல்லது விற்பனை செய்தாலோ, அவர்களுக்கு மீது கடுமையான தண்டனை அளிக்கப்படும். சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். தடையை மீறி விற்பனை செய்தால் அவர்களின் விற்பனை உரிமமும் ஓராண்டுக்குத் தடை செய்யப்படும்.

2012ம் ஆண்டே டில்லி அரசு இதனை அறிவித்திருந்தது. இருப்பினும், சில சில்லறை வியாபாரிகள், வெற்றிலைக்குள் மடித்து வேறு விதமாக புகையிலைப் பொருட்களை, தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின்  வழிகாட்டுதலின்பேரில் தற்போது, அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்கும் பணியில் நலவாழ்வுத் துறையும் இறங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் Satyendra Jain. 

ஆதாரம் : PTI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.