2016-04-13 14:55:00

லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு இக்கட்டான சூழல்


ஏப்.13,2016. லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்த மக்கள் இக்கட்டான ஒரு சூழலை எதிர்நோக்கிவரும் நிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லெஸ்போஸ் தீவுக்குச் செல்கிறார் என்று, கிரேக்க கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் கூறியது.

லெஸ்போஸ் தீவுக்குப் புதிதாக வந்துசேரும் புலம்பெயர்ந்த மக்கள், துருக்கிக்கு அனுப்பப்பட வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றியமும் துருக்கி நாடும் இம்மாதத்தில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி, புலம்பெயர்ந்த மக்கள், துருக்கிக்கு அனுப்பப்பட்டுவருவது பற்றிக் குறிப்பிட்ட காரித்தாஸ் நிறுவனம், அத்தீவில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள், திருத்தந்தையின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி இருப்பதாகக் கூறியது.

2015ம் ஆண்டில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களும், 2016ம் ஆண்டில், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்களும் லெஸ்போஸ் தீவைக் கடந்து சென்றுள்ளனர் என்றும், இவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் லெஸ்போஸ் தீவுக்கு வந்துள்ளனர் என்றும் கிரேக்க காரித்தாஸ் நிறுவனம் கூறியது.

இந்தப் புலம்பெயர்ந்த மக்கள், போர் மற்றும் ஏழ்மையினால், தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறியவர்கள் என்றும், இவர்களில் 55 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் சிறார் என்றும் அந்நிறுவனம் கூறியது.

லெஸ்போஸ் தீவில், புலம்பெயர்ந்த மக்களுக்கென, 220 படுக்கைகளைக்கொண்ட 88 அறைகளை காரித்தாஸ் நிறுவனம் அமைத்து உதவி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.