2016-04-13 15:01:00

போலந்து திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டு


ஏப்.13,2016. போலந்து நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவை, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் குறிப்பிட்டு, அந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் போலந்து மக்களுக்காக, இறைவனிடம் இறைஞ்சினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட ஏராளமான போலந்து மக்கள், அந்நாட்டின் ஆயர்கள் மற்றும் விசுவாசிகளுடன் சேர்ந்து, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்காக, இறைவனுக்குத் தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

இந்த வரலாற்று நிகழ்வு, போலந்து மக்களை விசுவாசத்திலும், ஆன்மீகத்திலும், கலாச்சாரத்திலும் உருவாக்கியுள்ளது என்றும், இம்மக்களை, கிறிஸ்து, தமது மரணம் மற்றும் உயிர்ப்புப் பேருண்மையில் பங்குகொள்வதற்கு அழைக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியிருப்பது போன்று, இறைத்தந்தை, திருமகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குப் பெற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான இக்கொடைக்கு, நம் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து நாட்டின் இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளும் திருமுழுக்கு அருளுக்கு விசுவாசமாக இருந்து, கிறிஸ்து மற்றும் திருஅவையின் அன்புக்குச் சாட்சிகளாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

966ம் ஆண்டில், போலந்து அரசர் முதலாம் Mieszko அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக, வருகிற வெள்ளிக்கிழமையன்று, போலந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் Poznań நகரில் கூடவுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.