2016-04-13 15:36:00

அமைதி ஆர்வலர்கள் : 2011ல் நொபெல் அமைதி விருது Karman


ஏப்.13,2016. “ஏமன் நாட்டைப் பற்றி கவலை வேண்டாம். ஏமன் நாடு அமைதியில் தொடங்கியது, அதன் புரட்சி, அமைதியில் கொண்டுபோய் முடியும். அந்நாடு, தனது புதிய நாட்டை அமைதியோடு ஆரம்பிக்கும்” என்று, 2011ம் ஆண்டில் சொன்னவர் Tawakkol Abdel-Salam Karman. இவர், ஏமன் நாட்டின் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், Al-Islah அரசியல் கட்சியில் உயர் மதிப்புடையவரும், மனித உரிமை ஆர்வலருமாவார். "எல்லைகளற்ற பெண்கள் பத்திரிகையாளர்(Women Journalists Without Chains-WJWC))" என்ற குழுவை 2005ம் ஆண்டில் ஏற்படுத்தியவர்களில் ஒருவரான இவர், இக்குழுவை தலைமையேற்று நடத்துபவர். ஏமன் நாட்டு மக்களால், "இரும்புப் பெண்" என்றும், "புரட்சியின் தாய்" என்றும் இவர் அழைக்கப்படுகிறார். Tawakkol Karman அவர்கள், அரபு நாடுகளில் மக்களாட்சியை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட அரபு வசந்தம் எழுச்சிக் காலத்தில், 2011ம் ஆண்டில், ஏமனில் இடம்பெற்ற புரட்சியின்போது, பன்னாட்டு அளவில் புகழடைந்தவர். லைபீரிய நாட்டின், Ellen Johnson Sirleaf, Leymah Roberta Gbowee ஆகிய இரு அமைதி ஆர்வலர்களுடன் இணைந்து, 2011ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டிருப்பவர் Tawakkol Karman. அச்சமயத்தில், Tawakkol Karman அவர்கள், இவ்விருதைப் பெற்ற ஏமன் நாட்டு முதல் அரபுப் பெண், இரண்டாவது முஸ்லிம் பெண் மற்றும் இரண்டாவது இளம் வயதினர் என்ற பெருமையைப் பெற்றார். ஏமன் நாட்டுப் பத்திரிகையாளராக, 2005ம் ஆண்டில் இவர், நாட்டில் ஆற்றிய பணியும், 2007ம் ஆண்டில் கைபேசி செய்திச் சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, கைபேசி செய்திச் சேவைக்கு ஆதரவாளராகச் செயல்பட்டு, பத்திரிகை சுதந்திரத்திற்காக, இவர் போராட்டங்களை முன்னின்று நடத்தியதும் இவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றன. 2007ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர், ஏமனில், சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஒவ்வொரு வாரமும் போராட்டங்களை நடத்தினார். "ஜாஸ்மின் புரட்சிக்கு" ஆதரவளித்த, ஏமன் மக்களின் போராட்டத்தை இவர் திசை மாற்றினார். 2011ம் ஆண்டு சனவரியில், டுனிசியா நாட்டு    மக்கள் Zine El Abidine Ben Ali அவர்களின் அரசைக் கவிழ்த்ததற்குப் பின்னர் தொடங்கிய போராட்டத்தை இவர், அரபு வசந்தம் என்று அழைத்தார்.

Tawakkol Karman அவர்கள், ஏமன் நாட்டில், Taiz மாநிலத்தில், Mekhlaf என்ற ஊரில், 1979ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பிறந்தார். பழமைவாதக் கொள்கையுடைய ஒரு நாட்டில் கல்விக்கு ஏற்ற இடம் என்று கூறப்படும் மற்றும் ஏமனில் மூன்றாவது பெரிய நகரமுமான Taiz நகருக்கு அருகில், இவர் வளர்க்கப்பட்டார். இவரது தந்தை Abdel Salam Karman, ஒரு வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி. இவரது சகோதரி Tariq Karman ஒரு கவிஞர். Mohammed al-Nahmi என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். வணிகயியல் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டங்களைப் பெற்றுள்ள இவருக்கு, 2012ம் ஆண்டில், கானடாவிலுள்ள, ஆல்பெர்த்தா பல்கலைக்கழகம், பன்னாட்டுச் சட்டத்தில், கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கியது. மனித உரிமைகளை, குறிப்பாக, பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் சனநாயக உரிமைகளை ஊக்குவிப்பதற்காக, ஏழு பெண் பத்திரிகையாளருடன் சேர்ந்து, 2005ம் ஆண்டில் WJWC என்ற மனித உரிமைகள் அமைப்பை உருவாக்கினார் Tawakkol Karman.  WJWC அமைப்பு, 2005ம் ஆண்டிலிருந்து ஏமனில் மீறப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தை ஓர் ஆவணமாக, 2007ம் ஆண்டில் வெளியிட்டது. பத்திரிகையாளரைக் குறிவைத்து ஏமன் தகவல் துறை அமைச்சகம் நீதி மன்றங்களை உருவாக்கியது குறித்து 2009ம் ஆண்டில் Tawakkol Karman விமர்சித்தார். ஏமனில், பத்திரிகை சுதந்திரத்திற்கு வெளிப்படையான ஆதரவாளராக இவர் செயல்பட்டார்.

மேலும், முகம் முழுவதையும் நன்றாகக் காட்டும், அதேநேரம், தலையையும் கழுத்தையும் மூடும் பலவண்ண hijab ஆடைக்கு ஆதரவு தெரிவித்தார் Karman. இதன் அடையாளமாக, முஸ்லிம் பெண்கள், வெளியில் செல்லும்போது, கண்கள் மட்டும் தெரியும்படியாக அணியும் பாரம்பரிய niqab மேலாடையை இவர் கைவிட்டார். 2004ம் ஆண்டில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் niqabடன் முதலில் இவர் தோன்றினார். உடம்பு முழுவதும் மூடுவது கலாச்சாரமேயன்றி, இஸ்லாம் மதத்தால் சொல்லப்பட்டது அல்ல என்றார் Tawakkol Karman. ஆண்களும், பெண்களும் ஒன்றுசேர்ந்த மனித சக்தி, சுதந்திரமாகச் செயல்படுத்தப்படும் ஒரு சுதந்திரமான, சனநாயக சமுதாயத்தில் மட்டுமே, பெண்கள் சார்ந்த விவகாரங்களுக்குத் தீர்வுகளை எட்ட முடியும். நமது கலாச்சாரம், மனிதக் கலாச்சாரம் என்றழைக்கப்படுகின்றது. இது ஆண்கள் அல்லது பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல என்று, Karman அவர்கள் ஒருமுறை சொல்லியிருக்கிறார். இஸ்லாமிய நாடு வலுவானதாக இருந்த பழங்காலத்தில், பெண்கள் சுதந்திரமாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், முஸ்லிம் பெண்கள் தலைவர்களாக, அறிவியலாளர்களாக,  வாழ்க்கைத் தொழிலைக் கொண்டவர்களாக இருந்திருக்கிரார்கள். எல்லாமே நீதியைச் சார்ந்தது என்றும் சொல்லியுள்ளார் Tawakkol Karman.

இவர், ஏமன் மீதான அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கொள்கையை எதிர்த்தவர். ஏமனில் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக மட்டும் புரட்சி நடக்கவில்லை, ஆனால், குழந்தைத் திருமணம் போன்ற மிக முக்கியமான சமூகப் பிரச்சனைகளைக் களைவதற்கும் புரட்சி தொடங்கியது. எங்கள் கட்சிக்கு இளையோர் தேவை. ஆனால், இளையோரை வழிநடத்திச் செல்ல கட்சிகள் தேவை என்றார் Karman. இவர் தனது 32வது வயதில் நொபெல் அமைதி விருதைப் பெற்றார். 2014ம் ஆண்டில் 17 வயது நிரம்பிய மலாலா யூசூப் சாய் இவ்விருதைப் பெற்றார். நொபெல் அமைதி விருதின் 110 வருட வரலாற்றில், 2011ம் ஆண்டுக்கு முன்னர், 12 பெண்களே இவ்விருதைப் பெற்றிருந்தனர். Tawakkol Karman அவர்களுக்கு விருதளித்த, நார்வே நொபெல் விருதுக் குழு, அரபு வசந்தம் எழுச்சிக்கு முன்னரும், அந்த எழுச்சியின்போதும், மிகவும் இன்னல் நிறைந்த சூழல்களில், ஏமனில், பெண்களின் உரிமைகளுக்கானப் போராட்டத்திலும், அந்நாட்டில் அமைதி மற்றும் சனநாயகத்தைக் கொணர்வதிலும்  முன்னிலை வகுத்தவர் Karman என்று பாராட்டியது. அமைதி என்பது போர்களை நிறுத்துவது என்று மட்டும் அர்த்தமல்ல, அடக்குமுறை மற்றும் அநீதியை நிறுத்துவதாகும் என்று சொல்லியுள்ள இந்த அமைதி ஆர்வலரின் குரல், ஏமனில் ஓங்கி ஒலிக்கட்டும். ஏமனில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் செயல்படுத்தப்படட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.