2016-04-12 15:34:00

துன்பத்திற்குள்ளாவது திருஅவையின் அன்றாட உணவு


ஏப்.12,2016. ஏரோது அரசனால் கொல்லப்பட்ட குழந்தை மறைசாட்சிகள் மற்றும் முதல் மறைசாட்சி ஸ்தேவானுக்கு நிகழ்ந்தது போன்று, இன்றும், ஏராளமான கிறிஸ்தவர்கள், கிறிஸ்து மீது தாங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்திற்காகக் கொலை செய்யப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், புனித ஸ்தேவானின் மறைசாட்சிய நிகழ்வை விளக்கும் முதல் வாசகத்தை(தி.ப.7,51-8,1) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு என்று கூறினார்.

துன்புறுத்தப்படுவது, திருஅவையின் அன்றாட உணவு என்று இயேசுவும் சொன்னார்; உரோம் நகரைச் சுற்றி வந்தாலும், கொலோசேயும் சென்றாலும், மறைசாட்சிகள் சிங்கங்களால் கொல்லப்பட்டதை நினைத்துப் பார்க்கிறோம்; ஆனால் இவர்கள் மட்டும் மறைசாட்சிகள் அல்ல, இன்றும் ஒவ்வொரு நாளும் ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகின்றனர்; பாகிஸ்தானில் உயிர்ப்பு ஞாயிறைக் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், ஏனெனில் அவர்கள் உயிர்த்த கிறிஸ்துவைக் கொண்டாடினர் என்று கூறினார் திருத்தந்தை.

அரிதாகப் பேசப்படும் இன்னொருவிதமான அடக்குமுறை உள்ளது என்றும், கலாச்சாரம், நவீனம், முன்னேற்றம் ஆகிய போலித் தோற்றத்துடனும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவின் பெயரை அறிவிப்பவர்கள் மட்டும் துன்புறுத்தப்படுவதில்லை,  இறைவனின் பிள்ளைக்குரிய விழுமியங்களைக் கொண்டிருந்து, அவற்றை வெளிப்படுத்த விரும்புவர்களும் துன்புறுத்தப்படுகின்றனர், இது, கடவுள் தம் பிள்ளைகளில் துன்புறுத்தப்படுவதாகும் என்றும் கூறினார். இது, மனிதரின் சுதந்திரத்தைப் பறிக்கும் உலகின் துன்புறுத்தலாகும் என்றுரைத்த திருத்தந்தை, நம் ஆண்டவர் நம்மைக் கைவிடமாட்டார் என்ற அவரின் வாக்குறுதியையும் மறையுரையின் இறுதியில் நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.