2016-04-12 16:14:00

சிரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களைச் சீரமைப்பதற்கு கூட்டு முயற்சி


ஏப்.12,2016. சிரியாவில், போரினால் அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை மீண்டும் சீரமைப்பதற்கு மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தந்தையின் அலுவலகமும், வத்திக்கானும் இணைந்து செயலாற்றவுள்ளன என்று, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தந்தை கிரில் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே, கியூபாவில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்குப் பின்னர், இவ்விரு சபைகளுக்கும் இடையே ஒத்துழைப்பின் தெளிவான அடையாளமாக இச்செயல் உள்ளது என ஊடகங்கள் கூறுகின்றன. 

சிரியாவில் இடம்பெறும் சண்டையில் அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட கிறிஸ்தவ இடங்கள் குறித்த விரிவான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சிரியாவிலும், லெபனானிலும் மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற உதவிகளை ஒன்றிணைந்து ஆற்றும் நோக்கத்தில், இம்மாதம் 6,7 தேதிகளில், அந்நாடுகளுக்கு, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்ட பயணத்தில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.