2016-04-11 15:28:00

வாரம் ஓர் அலசல் – மாற்றி யோசி


ஏப்.11,2016. கண் தெரியாத சிறுவன் ஒருவன், ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் எதிரில், "எனக்கு இரண்டு கண்களும் தெரியாது, தயவு செய்து பிச்சை போடுங்கள்" என்று எழுதி இருந்தது. அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதைப் பார்த்துக்கொண்டே சென்றார்கள், யாரும் காசு போடுவது போல்  தெரியவில்லை. ஒரு நபர் தன்னுடைய பையிலிருந்து காசை எடுத்து அவன் தட்டில் போட்டார். பிறகு அச்சிறுவனின் முன்னால் இருந்த அறிவிப்பு அட்டையின் பின்பகுதியில், ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில், அவ்வழியே சென்ற பலரும், அவன் தட்டில் சில்லரைகளைப் போட ஆரம்பித்தனர். மாலையானதும் அந்த அட்டையை எழுதி வைத்தவர் வந்து பார்த்தார். ஐயா, அந்த அட்டையில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று, அந்தச் சிறுவன் அவரிடம் கேட்டான். நீ என்ன எழுதி வைத்திருந்தாயோ, அதையேதான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார் அவர். "இன்றையப் பொழுது நன்றாக விடிந்துள்ளது, ஆனால் என்னால்தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகத்தை படித்த அனைவரும், உனக்குக் கண் தெரியாது என்பதைவிட, நல்லவேளை நமக்குக் கண் இருக்கிறது, நம்மால் எல்லாவற்றையும் கண்டு இரசிக்க முடிகின்றது என்று உனக்குத் தர்மம் செய்துவிட்டுச் செல்கிறார்கள் என்று சொன்னார்.

அன்பு நெஞ்சங்களே, “மாற்றி சிந்தனைசெய்”என்ற சுலோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். உலக வரலாற்றை மாற்றியமைத்த பலர், வித்தியாசமாகச் சிந்தித்ததே காரணம். அருளாளர் அன்னை தெரேசா, காந்திஜி, அம்பேத்கார், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், மன்டேலா, மலாலா... என்று, ஒரு பெரிய பட்டியலே இருக்கின்றது. அதேநேரம், மாற்றி சிந்தித்ததால், அழியாதப் பழிச்சொல்லுக்கு ஆளாகியிருப்பவர்களும் உள்ளனர். கெமர் ரூஜ், ஹிட்லர், செங்கிஸ்கான்... என்று, இவர்களுக்கும் வரலாற்றில் ஒரு பட்டியல் உள்ளது. எந்தத் துறையிலும் சரி,  முத்திரைப் பதித்து, முன்னோடிகளாகத் திகழ்பவர்கள் எல்லாருமே, நம்மைப் போன்றவர்கள்தான். ஆனால், அவர்களின் அணுகுமுறையில்தான் வேறுபாடு இருக்கிறது. புகழ்பெற்ற ஆப்பிள் கணனி நிறுவனத்திற்கு, விளம்பர சுலோகமாக இருப்பது, "Think different மாற்றி யோசி" என்பதே. 1995ம் ஆண்டில் வெளிவந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.0 மாபெரும் வெற்றியடைந்ததில், ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வெகுவாகச் சரியத் தொடங்கியது. இந்நிலையில், 1985ம் ஆண்டில், அந்நிறுவனத்தால் வெளியே அனுப்பப்பட்டவரும், 1976ம் ஆண்டில் அந்நிறுவனத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை, மீண்டும் அழைத்தது அந்நிறுவனம். அவர், ஆப்பிளுக்குத் திரும்பி வந்தபின்பு “மாற்றி யோசி”என்பதையே தன் நிறுவனத்தின் தாரக மந்திரமாக்கிக் கொண்டார். அதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமைந்தது. ஆப்பிள் விளம்பரம் ஒன்று இவ்வாறு அறிவித்தது..

“கிறுக்கர்களை, கோட்டிகளை, கலகக்காரர்களை, வட்டத்திற்குள் சதுரமாகும் மனிதர்களை வரவேற்போம். அவர்கள் மாற்றிப்போட்டுப் பார்ப்பவர்கள். சட்ட திட்டங்களில் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களை நீங்கள் விரும்பலாம், வெறுக்கலாம், பாராட்டலாம், அவர்களுடன் கருத்து வேறுபடலாம். ஆனால் அவர்களை ஒதுக்கித்தள்ள உங்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் விடயங்களை மாற்றியமைக்கிறார்கள். அவர்கள் மனிதகுலத்தை முன்னோக்கி நகர்த்துகிறார்கள். பைத்தியக்காரத்தனம் என்று அவர்களைப் பலர் பார்த்தாலும், நாங்கள் அவர்களிடத்தில் நிபுணர்களைப் பார்க்கிறோம். ஏனெனில் உலகை மாற்றி விடலாம் என்று சிந்திக்கும் அளவுக்கு பைத்தியங்கள்தான், உண்மையில் உலகை மாற்றி அமைக்கவும் செய்கிறார்கள்”...

ஆப்பிள் கணனி நிறுவனம், இன்று இமாலய உச்சியை எட்டியுள்ளதற்கு தாரக மந்திரமாக அமைந்தது மாற்றி யோசி என்பதே. தொழில்முனைவோர் பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போவதில்லை; அஞ்சுவதும் இல்லை. தடைகள், தாண்டுவதற்கு என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. பிரச்சனைகள் வரும்போது அவற்றை அவர்கள் வாய்ப்புகளாகவே பார்க்கின்றனர். அவர்கள் எப்போதுமே முன்னேற்றத்திற்கான தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். Aman Jassal என்பவர் சொன்னார், “வித்தியாசமாக வாசிப்பது, வித்தியாசமாகச் சிந்திப்பதற்கே, உலகம் ஏற்கனவே, எல்லாத் துறைகளிலும் பெரும் போட்டியில் சென்று கொண்டிருக்கின்றது” என்று. Ismat Ahmed Shaikh என்பவர் சொன்னார், “சிறந்த பொன் மொழிகள், பெரிய மனிதரிடமிருந்து வருவதில்லை, ஆனால், வித்தியாசமாகச் சிந்திக்கும் சாதாரண மக்களிடமிருந்தே வருகின்றன”என்று. எதையுமே வழக்கம்போல சிந்திப்பதைவிட, மாற்றி சிந்திப்பது வாழ்வில் முன்னேற வழியமைக்கும். இதையேதான், Udayveer Singh என்பவர் சொல்கிறார், “பெட்டியை அழிப்பதைவிட, பெட்டிக்கு வெளியே சிந்திப்பது சிறந்தது” என்று. அதாவது ஒரு காரியம் நடக்கவில்லையா, வேறு மாதிரி சிந்தனை செய்யுங்கள், மாற்றி யோசியுங்கள் என்கிறார் உதய்வீர் சிங். 

அன்பர்களே, நமக்கெல்லாம் காக்கா கதை ஒன்று தெரியும். தாகத்தால் தவித்த, காக்கா ஒன்று, வழியில், ஒரு குடத்தில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. ஆனால், அதன் அலகுக்கு அது எட்டவில்லை. எனவே, அங்கே கிடந்த, சின்னச் சின்ன கூழாங்கற்களை, ஒவ்வொன்றாக அலகால் எடுத்துவந்து குடத்திற்குள்ளே போட்டது. தண்ணீர், கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரவும், திருப்தியாகக் குடித்துவிட்டுப் பறந்து போனது. ஆனால், இக்கதையை, யு.ஆர்.எல் வலைத்தளம் வித்தியாசமாகப் பிரசுரித்துள்ளது. அந்தக் காக்காய், கல்லால் அந்த மண்ஜாடியின் அடியில் ஓங்கித் தட்டவும், ஜாடி உடைந்து, ஓட்டை வழியாகத் தண்ணீர் வெளியே கசியுது. அதனால், அது அதிகக் கஷ்டப்படாமல், அதைக் குடித்துவிட்டுப் பறந்து போகிறது. அடுத்து, இன்னொரு காக்கா பறந்து போய், எங்கிருந்தோ ஒரு ஸ்ட்ராவைக் கொண்டு வருகிறது. அதை ஜாடிக்குள்ளே விட்டு தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கிறது. மற்றொரு காக்கா, டம்ளருக்குள்ள இருக்கிற பொருளை ஒரு கம்பியால் எடுக்க முயற்சி செய்து அது முடியாமல் போகவே, அந்தக் கம்பியைக் கொக்கி மாதிரி வளைத்து அந்தப் பொருளை எடுக்கிறது. இப்படி, காக்கா கதை, பல விதங்களில் மாற்றிச் சிந்தித்து வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் மாற்றி யோசித்தல், பெட்டிக்கு வெளியே சிந்தித்தல் என்கின்றனர். வழக்கமான பாதையில் சிந்திக்கும்போது பிரச்சனைகளுக்கு, பல சமயங்களில் தீர்வு கிடைப்பதில்லை. ஆனால், அதையே மாற்றிச் சிந்திக்கும்போது தீர்வுகள் எளிதாகக் கிடைக்கின்றன. இது பலரின் அனுபவமும்கூட.

அன்பு நெஞ்சங்களே, எதிலும் பிரச்சனைகள், கடும் போட்டிகள் என்று வரும்போது, அதிலே சோர்ந்து விடாமல் மாற்றி சிந்தித்தவர்கள் உச்சத்தைத் தொடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, டி.வி.எஸ் 50 என்ற இரு சக்கர வாகனம் மிகவும் பிரபலமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கியபோது, அதற்குப் போட்டியாக, ‘பஜாஜ்’ நிறுவனத்தின் சன்னி என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனுடைய எழில்மிகு தோற்றத்தால் டி.வி.எஸ் நிறுவன வாகனத்தின் விற்பனை குறையத் துவங்கியது. இதை உணர்ந்த டி.வி.எஸ் நிறுவனம், அதைச் சரிசெய்யும் விதமாய், ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. ஏழு நாள்கள் தொடர்ந்து, டி.வி.எஸ் வாகனம் இயங்குவது என்று அறிவித்து, அதை சாதித்தும் காட்டியது. இதனால் அந்த இயந்திரத்தின் திறன் வெளிப்படையாக மக்களுக்குப் புரிந்தது. மக்களைக் கவர்ந்தது. அதன்மூலம் உண்மையை விளக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, விற்பனையை உயர்த்தியது அந்நிறுவனம். இது மாற்றி சிந்தித்ததால் மட்டுமே சாத்தியமானது.

ஒருவர் தனது வீட்டின் முன்னர் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு, தனது வீட்டுச் சுவரில் இப்படி எழுதி வைத்திருந்தாராம் - எங்கள் வீட்டுக் குழந்தைகள் அதிகம் குறும்பு செய்வதால், தயவு செய்து காரை எங்கள் வீட்டின் முன் நிறுத்தாதீர்கள் என்று. அன்பு நெஞ்சங்களே, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. கடசிகளின் பிரச்சாரங்களை ஊடகங்களில் வாசித்து வருகிறோம். இப்படிப்பட்ட தேர்தல் காலம் ஒன்றில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தலில், அறிஞர் அண்ணா அவர்கள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மருத்துவர் சீனிவாசன் அவர்கள் போட்டியிட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அண்ணாவுக்காகப் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "மருத்துவர் சீனிவாசன் ரொம்ப நல்ல மனிதர். பல ஆண்டுகளாக உள்ளூரிலேயே இருந்து எல்லாருக்கும் அறிமுகமானவர். குழந்தைகளுக்கும் இலவசமாக மருந்து கொடுப்பவர். இரவு இரண்டு மணிக்கு எழுப்பினாலும் வருத்தப்படாமல் வந்து சிகிச்சை செய்பவர்...' என்று, சீனிவாசன் அவர்களைப் புகழ்ந்து கொண்டே போனார். கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி! என்.எஸ்.கே. அவர்கள் தொடர்ந்து, "இப்படிப்பட்ட நல்ல மனிதரை,  எந்நேரமும் உதவக்கூடிய மருத்துவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிட்டீங்கன்னா, உங்களுக்கு யார் அவசரத்துக்கு உதவுவார்? அதனால் அவருக்கு ஓட்டுப்போட்டு அனுப்பிடாதீங்க. அண்ணாவுக்கே ஓட்டுப்போடுங்க. மற்றபடி பேச வேண்டியதை அண்ணா பேசிக்குவார்' என்று சொல்லி முடித்தாராம்! உடனே கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது.

இப்படி, மாற்றிச் சிந்திக்கும் திறனும், தொழில் சாதுர்யமுமே பலரின் வெற்றிக்கு வழி வகுக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் என, அனைத்துத் தளங்களிலும் மாற்றி சிந்திக்கும்போது தடைகள் நிச்சயம் வரும். அதைத் தகர்த்தெறிந்து நம்பிக்கையுடன் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம். அதேபோல், ஒருவர் பற்றி முற்சார்பு எண்ணத்துடன், முன்கூட்டியே முடிவெடுக்கும்போது, மனக்கசப்புகள், உறவுச் சிக்கல்கள் வருகின்றன. ஆனால், அதையே மாற்றிச் சிந்திக்கும்போது, இந்த நம் மனநிலை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அழுத்தமாய் நட புதை மணலில்…., ஆழமாய்க் குதி ஆழ்கடலில்…., உயரவே போ அந்தரத்தில்..., வேகமாய் ஓடு மலைக்குன்றில்.., ஓவியம் வரைக காற்றினில்…, பாடுக முகாரி மங்கல நாளில் என்றார்கள் பலர். ஆனால் அனுபவம் அறிவுறுத்தியது மாற்றி யோசி என்றே…. என, ஒருவர் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். எனவே அன்பர்களே மாற்றிச் சிந்திப்போம். வாழ்வில் வெற்றியடைவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.