2016-04-11 16:19:00

கடத்தப்பட்டுள்ள அருள்பணியாளரை விடுவிக்க திருத்தந்தை அழைப்பு


ஏப்.11,2016. அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களும், போர் இடம்பெறும் பகுதிகளில் பிணையல் கைதிகளாக, கடத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் விடுதலை செய்யப்படுமாறு, இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகலில், அல்லேலூயா வாழ்த்தொலி உரையைக் கேட்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில், இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்து நமக்கு அளித்துள்ள நம்பிக்கையில், இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறினார்.

குறிப்பாக, ஏமன் நாட்டின் ஏடன் நகரில், கடந்த மார்ச் 4ம் தேதி கடத்தப்பட்டுள்ள இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களை, சிறப்பாக நினைக்கின்றேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏடன் நகரில், பிறரன்பு மறைபோதக சகோதரிகள் சபை நடத்திய வயதானவர் இல்லத்தில், கடந்த மார்ச் 4ம் தேதி தீவிரவாதிகள் நுழைந்து 4 அருள்சகோதரிகள் உட்பட 16 பேரைக் கொலை செய்த பின்னர், அங்கிருந்த, கேரளாவைச் சேர்ந்த அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, ஏமனில் அமலுக்கு வந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனம் இத்திங்களன்று வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.