2016-04-11 15:15:00

இது இரக்கத்தின் காலம் : வாடுவோரைக் கண்டு கனியும் இதயம்


அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகர் வாஷிங்டன் நகரில் வாழ்ந்து வருபவர் சிறுமி ஹைலி போர்ட் (Hailey Ford). ஒன்பது வயது நிரம்பிய இச்சிறுமி, ஒருநாள், தன் அம்மா, அப்பாவுடன் கடைக்குப் போகும்போது, வீடில்லாத ஒருவர், தெருவோரம் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தக் காட்சி ஹைலியின் மனதைப் பாதித்தது. நாம் மட்டும் பாதுகாப்பான வீட்டில் தூங்கும்போது, அந்த மாமா மட்டும் வீடில்லாமல், குளிரிலும் வெயிலிலும் வாடுகிறாரே என வருந்தினார். ஹைலியின் தாத்தா ஒரு கட்டட ஒப்பந்தக்காரர். தாத்தா வீடுகள் உருவாக்குவதை ஹைலி அடிக்கடிப் பார்த்திருக்கிறார். வீடில்லாத அந்த மனிதருக்கு நாமே ஏன் ஒரு வீட்டைக் கட்டித்தரக் கூடாது என முடிவெடுத்தார். வீட்டில் தான் சேர்த்து வைத்த காசைக் கொண்டு பழைய மரப் பலகைகளைக் கடைகளில் வாங்கினார். தன் குட்டித் தங்கையைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் வேலையைத் தொடங்கினார். இதைக் கவனித்த ஹைலியின் அம்மா, ஹைலிக்குப் பணம் கொடுத்து உதவினார். வேலை மளமளவென நடந்தது. ஆனால், ஹைலியின் அப்பாவோ, வீடு கட்டும் வேலையால் படிப்பு கெட்டுவிடக் கூடாது, அதனால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும்தான் வீடு கட்ட வேலை செய்ய வேண்டும் என்று, கண்டிப்பாகச் சொன்னார். அதனால் அந்த வீட்டைக் கட்டி முடிக்க சில மாதங்கள் ஆயின. ஹைலி கட்டிய இந்த வீடு 32 சதுர அடி பரப்பளவு கொண்டது. வீட்டை நகர்த்திக்கொள்ள வசதியாக, சக்கரங்களையும் ஹைலி பொருத்தியுள்ளார். குட்டி ஜன்னல், மின்சாரத்துக்காகச் சூரிய மின்சக்தி பேனலை வைத்து, வீட்டை உருவாக்கியிருக்கிறார் சிறுமி ஹைலி. இப்போது வீடு இல்லாதவர்களுக்கு, வீடு கட்டித்தர நிதியும் திரட்டிவருகிறார். உணவுத் தானியங்களைப் பயிரிட்டு அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்க ஹைலி முடிவு செய்துள்ளார். இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.