2016-04-09 13:52:00

பெற்றோர், பிள்ளைகளுக்கு விசுவாசத்தின் முதல் ஆசிரியர்கள்


ஏப்.09,2016. "பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு விசுவாசத்தின் முதல் ஆசிரியர்களாக மாறும் இடம் குடும்பம்; இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவிக்கும் ஒவ்வொரு  குடும்பத்திற்கும் இறைவார்த்தை ஆறுதலின் ஊற்றாக உள்ளது; குடும்பத்தின் நல்வாழ்வு, உலகின் வருங்காலத்தைத் தீர்மானிக்கிறது; குடும்பம் இன்றி, சமுதாயம் செயல்படமுடியாது, எனவே குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்பவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இவ்வெள்ளி மாலையில்  வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில், @Pontifex  என்ற முகவரியில், டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட அவரின் “அன்பின் மகிழ்வு”திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தி, இவ்வெள்ளி பிற்பகலில் நான்கு டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், போலந்து நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்குத் தனது பிரதிநிதியாக, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை, போலந்து நாட்டின் Gniezno மற்றும் Poznań நகரங்களில், இப்பெருவிழா சிறப்பிக்கப்படவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.