2016-04-09 13:44:00

நசுக்கப்படுதலும்,துன்பங்களும் கிறிஸ்தவத்தின் சான்றுகள்


ஏப்.09,2016. இயேசுவைப் பின்செல்லும்போது, பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற விளம்பர நோக்கத்தைக் கொண்டு செயல்படுபவர்களை, கிறிஸ்தவ வாழ்வுமுறை சகித்துக் கொள்ளாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானிலுள்ள Redemptoris Mater சிற்றாலயத்தில், Aletti மையத்தின் உறுப்பினர்களுக்குத் இவ்வெள்ளி மாலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இயேசுவின் பெயருக்காக, அவமதிப்பை ஏற்படுத்தும் துன்பங்களின் மத்தியில், மகிழ்வாய் வாழ்வது பற்றி மறையுரையாற்றினார்.

உரோம் நகரில், இயேசு சபையினரால் நடத்தப்படும் பாப்பிறை ஓரியன்டல் நிறுவனத்தின், Aletti ஆய்வு மையம் ஆரம்பிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இத்திருப்பலியில், நசுக்கப்படுதலும், துன்பங்களும் கிறிஸ்தவச் சான்றின் அங்கங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய கிறிஸ்தவப் பாரம்பரியத்தைக் கொண்ட வல்லுனர்கள் மற்றும் கலைஞர்கள், தங்களையொத்த மேற்குலகினரைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் Aletti ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இத்திருப்பலியில், Redemptoris Mater சிற்றாலயத்தின் மொசைக் வண்ண வேலைப்பாடுகளை அமைத்த, Aletti ஆய்வு மைய இயக்குனர் இயேசு சபை அருள்பணி Marko Rupnik அவர்களும் பங்கு கொண்டார். இவரே, இரக்கத்தின் யூபிலி ஆண்டு இலச்சினையை வரைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.