2016-04-09 14:32:00

செங்கடலில், சவுதி அரேபியா-எகிப்தை இணைக்கும் பாலம்


ஏப்.09,2016. சவுதி அரேபியாவையும், எகிப்தையும் இணைக்கும் வகையில், செங்கடலின் குறுக்கே பாலம் கட்டப்படும் என, சவுதி அரேபியாவின் அரசர் சல்மான் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய அரசர் சல்மான் அவர்கள், இந்தப் பாலத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் பெருமளவு மேம்படுமென தெரிவித்திருக்கிறார்.

இந்த வரலாற்று நடவடிக்கையின் மூலம் ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களும் இணைக்கப்படும் எனவும், இரு கண்டங்களுக்கும் இடையிலான வர்த்தகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படும் எனவும் அரசர் சல்மான் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பாலத்தைக் கட்டி முடிப்பதற்கு, மூன்று முதல் நான்கு பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்தது. எகிப்தின் அதிபராக 2013ம் ஆண்டில் சிசி அவர்கள் பதவியேற்ற பிறகு, சவுதி அரேபியாவும், பிற வளைகுடா நாடுகளும் கோடிக்கணக்கான டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளன.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.