2016-04-07 15:52:00

மறைசாட்சிகள், வன்முறைக்கு எதிரான அன்பு ஆயுதங்கள்


ஏப்.07,2016. அல்ஜீரிய நாட்டின் Tibhirineல் 1996ம் ஆண்டில் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட, ஏழு கத்தோலிக்க டிராப்பிஸ்ட் துறவியர் பற்றிய ப்ரெஞ்ச் மொழி நூலுக்கு, அணிந்துரை எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஏழு துறவியரும், கொலை செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில், நாம் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நம் அன்றாட வாழ்வில், எளிமை மற்றும் இரக்கத்தின் அடையாளங்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 6, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ள, L'he'ritage என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நம் உலகைத் துன்புறுத்தும் தீமையோடு போராடுவதற்கு, இவ்வாறு வாழ்வதே சிறந்தது என்றும் எழுதியுள்ளார்.

இத்துறவிகள், வன்முறையைக் கண்டு அஞ்சி ஓடாமல், அன்பின் ஆயுதங்களோடும், சமய வேறுபாடின்றி, உடன்பிறப்பு உணர்வோடு அனைவரையும் வரவேற்பதன் வழியாகவும், குழு செபத்தாலும் வாழ்ந்தனர் என்றும் எழுதியுள்ளார் திருத்தந்தை.

Tibhirineவில், இந்த மறைசாட்சித் துறவிகள், முஸ்லிம்களுடன் உரையாடல் நடத்தி அமைதியிலும், நல்லிணக்கத்திலும் வாழ்ந்து வந்தனர் என்றும், கிறிஸ்தவர்களாகிய நாமும், எல்லாரோடும், ஆன்மீக நட்புறவு கொண்டு, வன்முறையை வெல்லும் சகோதரத்துவ உரையாடலில் வாழ வேண்டுமெனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Christophe Henning என்பவர் எழுதிய 180 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை 14.90 யூரோக்களாகும்.

ஆதாரம் : Oss.Rom. / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.