2016-04-07 16:01:00

திருத்தந்தை - விளையாட்டு, ஓர் உலகளாவிய மொழி


ஏப்.07,2016. அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் விளையாட்டு, ஓர் உலகளாவிய மொழி என்றும், மக்கள் சந்திக்கவும், சண்டைகள் ஒழிக்கப்படவும் இது உதவும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இப்புதனன்று ஐ.நா. கடைப்பிடித்த, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான மூன்றாவது அனைத்துலக விளையாட்டு நாளுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, இப்புதன் மறைக்கல்வியுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“உறுதியான வளர்ச்சித்திட்ட இலக்குகளுக்காக விளையாடுவோம்” என்ற தலைப்பில், ஐ.நா. விளையாட்டு அலுவலகம் இந்த உலக நாளைச் சிறப்பித்தது.  

மேலும், இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், 2015ம் ஆண்டுக்குப் பின்னான ஐ.நா.வின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, விளையாட்டு முக்கிய அங்கம் வகிக்கின்றது என்று கூறியுள்ளார்.

மனிதக் குடும்பத்திலுள்ள ஒவ்வோர் உறுப்பினரின் அடிப்படை உரிமைகள், சமத்துவம் மற்றும் மாண்பை ஊக்குவிப்பதற்கு, விளையாட்டு, தனித்துவமிக்க மற்றும் சக்திவாய்ந்த கருவியாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.