2016-04-07 16:01:00

அன்றாட வாழ்வு முறையைச் சீர்தூக்கிப் பார்க்க WHO அழைப்பு


ஏப்.07,2016. நீரிழிவு நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை, 1980ம் ஆண்டிலிருந்து நான்கு மடங்காகியுள்ளது என்றும், இவர்களில் அதிகமான பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஏப்ரல் 7, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக நலவாழ்வு தினத்தை முன்னிட்டு இவ்வாறு தெரிவித்துள்ள இந்நிறுவனம், உலகளவில் நீரிழிவு நோய் குறித்த அறிக்கையை வெளியிட்டு, மக்கள், தங்களின் அன்றாட வாழ்வு முறையைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

உலகில் 42 கோடியே, 20 இலட்சம் வயதுவந்தவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்நோயாளர்களின் எண்ணிக்கை, 1980ம் ஆண்டிலிருந்து 4.7 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

2012ம் ஆண்டில் நீரிழிவு நோயின் நேரடிப் பாதிப்பால் மட்டும் 15 இலட்சம் பேர் இறந்துள்ளனர். இவர்களில் எண்பது விழுக்காட்டினர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.