2016-04-06 15:25:00

புதன் மறைக்கல்வி உரை: இயேசுவில் தன் நிறைவைக் கண்ட இறைஇரக்கம்


ஏப்.,06,2016. குளிர்காலம் முடிந்து, சூரியனின் கதிர்கள் தன் வெப்பத்தைக் கொணர ஆரம்பித்து விட்டன. கோடை காலம் என்றாலே உரோம் நகரம் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் என்பது நாம் அறிந்ததே. அதற்கேற்ப, இப்புதனன்றும் தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளாலும், சுற்றுலாப் பயணிகளாலும் நிரம்பி வழிய, இறை இரக்கம் எவ்விதம் இயேசுவில் தன் முழு நிறைவைக் கண்டது என்பது குறித்து இவ்வார மறைக் கல்வியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கமே மனுவுருவாக வந்த இயேசுவில், இறை இரக்கம் எவ்விதம் தன் நிறைவைக் கண்டது என்பது குறித்து இன்றைய மறைக்கல்வி உரையில் நோக்குவோம். இவ்வுலகில் இயேசு வாழ்ந்த காலத்தில், தன் ஒவ்வொரு  நடவடிக்கையிலும் இரக்கத்தை வெளிப்படுத்துபவராக இருந்தார். மக்கள் கூட்டத்தைச் சந்தித்தல், நற்செய்தியை அறிவித்தல், நோயாளிகளைக் குணப்படுத்துதல், மக்களால் மறக்கப்பட்டவர்களுக்கு அருகாமையில் செல்லுதல், பாவிகளை மன்னித்தல் என ஒவ்வொன்றிலும் இறைவனின் கருணை, இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டது. அவர் வெளிப்படுத்திய அன்பு, அனைவருக்கும் தன்னைத் திறந்ததாகச் செயல்பட்டது.  அந்த அன்பு, சிலுவையில் தன் நிறைவைக் கண்டது. இரக்கத்தை அறிவிக்கும் அவரின் பணி, எளிமையான முறையில், எளிமையான யோர்தான் சுற்றுப்புறத்தில், தூய யோவானிடம் திருமுழுக்கைப் பெற பாவிகளோடு இணைந்து, இயேசு வரிசையில் நின்றபோது,  தன் துவக்கத்தைக் கண்டது. இயேசுவின் திருமுழுக்கின்போது தூய ஆவியாரை அனுப்பியதோடு, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" (மாற்கு 1:11)  என உரைக்கும் தந்தையாம் இறைவன், அவரின் இரக்கத்திற்கான பணியையும் உறுதி செய்கிறார்.   சிலுவையை உற்று நோக்குவதன் வழியாக, நாம் இந்த மறையுண்மையைக் குறித்து ஆழமாகத் தியானிக்கலாம். ஏனெனில், இங்குதான் இயேசு, இவ்வுலகின் பாவங்களை, அதாவது நம் பாவங்களை இறைத் தந்தைக்கு காணிக்கையாக்கினார். "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்.23:34) என சிலுவையில் தொங்கியபோது இயேசு கூறிய வார்த்தைகள் வழியாக‌, இறைவனின் கருணைநிறை அன்பிலிருந்து எவரும் விலக்கி வைக்கப்படுவதில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறார் இயேசு. எனவே, நாமனைவரும் நம் பாவங்களை ஏற்று, மன்னிப்பை வேண்டுவதற்கு ஒரு நாளும் அஞ்சக்கூடாது. ஒப்புரவு எனும் அருளடையாளம், சிலுவையிலிருந்து ஊற்றெடுத்து ஓடும் மன்னிப்பை நமக்கு வழங்குவதோடு, இறையருளிலும் நம்மைப்  புதுப்பிக்கிறது. இந்த யூபிலி ஆண்டில் நற்செய்தியை நாம் இன்னும் ஆர்வத்தோடு பற்றிக்கொள்வதோடு, இறைவனின் இரக்கம் மற்றும் மன்னிப்பை பறைசாற்றுபவர்களாக செயல்படுவோமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த புதன் மறைக்கல்வி உரையின்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Ohio மாநிலத்திலிருந்து தன்னை பார்க்க வந்திருந்த  6 வயது சிறுமி லிசி மையர்ஸை தனிப்பட்ட விதத்தில் சந்தித்து, தன் ஆசீரையும் வழங்கினார்.  Usher syndrome type II  என்ற அபூர்வ வகை நோயினால் பாதிக்கப்பட்டு, தன் பார்வை மற்றும் செவித்திறனை இழந்துவரும் இந்த 6 வயது சிறுமி, தான் பார்க்க விரும்பியவைகளுள் திருத்தந்தையின் பெயரையும் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, துருக்கி விமானம் இலவசப் பயணச்சீட்டை அளித்து, இக்குழந்தையும் அவரின் பெற்றோரும் உரோம் நகருக்கு வர உதவியுள்ளது. திருத்தந்தையும், இப்புதனன்று லிசி மையர்ஸைச் சந்தித்து ஆசீர்வதித்தார். இந்த மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் வழங்கிய இறை ஆசீரை நாமும் இப்போது பெறுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.