2016-04-06 14:54:00

திருப்பீடத்தின் உயரிய விருது பெற்ற முனைவர் கஸ்பாரி


ஏப்ரல்,06,2016. கடந்த 34 ஆண்டுகளாக, திருத்தந்தையர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களை ஒருங்கிணைத்த, முனைவர், அல்பெர்த்தோ கஸ்பாரி அவர்களுக்கு, திருப்பீடத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான, சிலுவையின் தளபதி பதக்கத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கினார்.

திருத்தந்தையர்கள், 2ம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகிய மூவரின் திருத்தூதுப் பயணங்களை ஒருங்கிணைத்து வந்த முனைவர் கஸ்பாரி அவர்கள் அண்மையில் பணிஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியுள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி, ஆகியோர் உட்பட இன்னும் சில கர்தினால்களும், பேராயர்களும் கலந்துகொண்டனர்.

1982ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை, மூன்று திருத்தந்தையர்களின் திருத்தூதுப் பயணங்களை ஏற்பாடு செய்த முனைவர் கஸ்பாரி அவர்களின் குடும்பத்தினரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

வத்திக்கானில் மிகச் சிறந்த பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் சிலுவையின் தளபதி பதக்கம் என்ற  விருதை, 1847ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.