2016-04-06 14:59:00

கென்யா கிறிஸ்தவ மாணவர்கள் - முதலாமாண்டு நினைவு


ஏப்ரல்,06,2016. தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நம் சகோதரர்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து, அமைதியிலும், ஒற்றுமையிலும், நீதியான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட இறைவனை வேண்டுகிறோம் என்று கென்யா நாட்டின் காரிஸ்ஸா ஆயர் ஜோசப் அலெக்சாண்டர் அவர்கள் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, காரிஸ்ஸா பல்கலைக் கழகத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 140 கிறிஸ்தவ மாணவர்களின் முதலாம் ஆண்டு நினைவை, இறை இரக்க ஞாயிறன்று கொண்டாடிய ஆயர் அலெக்சாண்டர் அவர்கள், இறைவனின் இரக்கத்தால் முடியாதது ஒன்றுமில்லை என்று கூறினார்.

மக்களின் அறிவுக்கண்களைத் திறக்கவேண்டிய கல்விக் கூடத்தில் இளையோர் இவ்விதம் கொலையுண்டது, இன்னும் வேதனையைத் தருகிறது என்று, மொம்பாசா பேராயர், Martin Musonde Kivuva அவர்கள், Aid to the Church in Need பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

தகுதியான கல்வியும், வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டால், தீவிரவாதப் போக்குகளிலிருந்து இளையோரைக் காப்பாற்ற முடியும் என்று பேராயர் Kivuva அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.