2016-04-06 15:09:00

இது இரக்கத்தின் காலம்... – நீ செய்ய வேண்டியதை முதலில் செய்


மசூதியில் பலர் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.

தொழுது கொண்டிருந்த ஒருவர், திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருந்தவரைப் பார்த்து "அடடா, நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்துவிட்டேன்" என்றார்.

"தொழுகை நேரத்தில் நீ பேசியதால் என் பிரார்த்தனையைக் கலைத்துவிட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்யவேண்டும்" என்றார் இரண்டாமவர்.

"நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக்கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்யவேண்டும்" என்றார், வீட்டை பூட்ட மறந்துவந்தவர். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீர்" என அந்த இருவரும் கேட்டனர்.

"பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான்" என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.