2016-04-05 15:59:00

நேபாளம் : கிறிஸ்மஸ், தேசிய விடுமுறை நாளிலிருந்து நீக்கம்


ஏப்ரல்,05,2016. நேபாளத்தின் தேசிய விடுமுறை நாள்கள் பட்டியலிலிருந்து கிறிஸ்மஸ் பெருவிழா நாளை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிறிஸ்மஸ், அரசு விடுமுறை நாளாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறிய, நேபாளக் கிறிஸ்தவர்களின்  தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அருள்பணி CB Gahatraj அவர்கள், கிறிஸ்மஸ் தேசிய விடுமுறையாக இல்லாவிட்டால், தனியார் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களால், இப்பெருவிழாவைக் கொண்டாட முடியாது என்று தெரிவித்தார்.

இந்துக்கள் மற்றும் பிற சமூகங்களின் 83 விழாக்களை அங்கீகரித்துள்ள நேபாள அரசு, கிறிஸ்தவர்களின் ஒரு விழாவைக்கூட அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார் அருள்பணி CB Gahatraj. மேலும், கிறிஸ்தவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, பொது விடுமுறை நாள்கள் அதிகரித்துவருவதைக் கட்டுப்படுத்தவே, இத்தீர்மானத்தை அரசு கட்டாயமாக எடுக்க வேண்டியிருந்தது, மாறாக, கிறிஸ்தவர்களைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல என்று, நேபாள உள்துறை அமைச்சர் Shakti Basnet அவர்கள் கூறியுள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், நேபாளம் சமயச் சார்பற்ற நாடாக மாறியபோது, கிறிஸ்மஸ், அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Asianews/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.