2016-04-05 14:55:00

இது இரக்கத்தின் காலம் : ஓரங்களை மையமாக்க...


ஒரு கற்பனைக் காட்சி இது. செல்வந்தர் ஒருவரின் மகனுக்குத் திருமணம் நிகழ்கிறது. திருமண விழாவின் முக்கியக் கட்டமாக, மாலை மாற்றுதல், தாலி கட்டுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. பொதுவாக, இந்நேரங்களில் முக்கியமான ஒருவர், மாலைகளை எடுத்துக் கொடுக்க, அவற்றை மணமக்கள் மாற்றிக்கொள்வர். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அந்நிகழ்வுக்கு முன், மணமகனின் தந்தை மேடையில் ஏறி, 'மைக்'கில் பேசுகிறார்: "இந்தத் திருமணவிழா நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவியவர்கள் பலர். அவர்களில் ஒருவரை, நான் மேடைக்கு அழைக்கப்போகிறேன்" என்று அந்த செல்வந்தர் கூறுகிறார்.

மணமேடைக்கு முன், முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பல முக்கியப் புள்ளிகள், தங்களில் யாரை அவர் அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மணமகனின் தந்தையோ, அரங்கத்திற்குப் பின்புறம் செல்கிறார். வீடியோ காமராக்கள் அவரைத் துரத்திச் செல்கின்றன. அரங்கத்தின் பின்புறம், துப்புரவு செய்யும் பத்து தொழிலாளர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் வயது முதிர்ந்த ஒருவரை, அரங்கத்திற்குள் அழைத்து வருகிறார், மணமகனின் தந்தை. மாலைகளை எடுத்து, மணமக்களிடம் தரும்படி, அந்த முதியவரிடம் கேட்கிறார், செல்வந்தர்.

சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோரைத் தேடிச்செல்வதும், அவர்களை மீண்டும் மையங்களுக்குக் கொணர்வதும் திருஅவையின் முக்கியப் பணி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை நாம் அறிவோம். ஓரங்களை மையமாக்க, இரக்கத்தின் காலம், இனிதான தருணம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.