2016-04-04 15:29:00

வாரம் ஓர் அலசல் – வார்த்தையிலும், வாழ்விலும் இரக்கம் நிறைய


ஏப்.04,2016. அன்பு நெஞ்சங்களே, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இரக்கச் செயல்கள் அதிகரித்து வருவதைப் பார்த்தும், கேட்டும் வருகிறோம். இரக்கச் செயல்களில் ஈடுபடுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இவ்வாண்டில் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இறை இரக்க ஞாயிறான, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி ஆற்றிய மறையுரையில்....

இயேசு மற்றும் திருத்தூதர்களால் தொடங்கப்பட்ட இரக்கத்தின் நற்செய்தி, இன்னும் முடிக்கப்படாமலேயே இருக்கின்றது. இரக்கம் ஒரு திறந்த புத்தகம். இப்புத்தகத்தில், வார்த்தையாலும், வாழ்வாலும் எழுத வேண்டியது நம் ஒவ்வொருவரின் வேலையாகும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். தெளிவான அன்புச் செயல்கள் வழியாக, இறைவனின் இரக்கத்திற்கு நாம் சான்றுகளாக வாழ வேண்டும். நாம் ஆற்றும் இரக்கச் செயல்கள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும்போதுகூட, எளிமையான, ஆனால், சக்திமிக்க அடையாளச் செயல்களால், தேவையில் இருப்போர்க்கு உதவுவதன் வழியே, இறைவனின் கனிவையும் ஆறுதலையும் நாம் கொண்டுவர முடியும். இன்றைய உலகில், ஏராளமான நம் சகோதர சகோதரிகள் உடலிலும், உள்ளத்திலும் காயமடைந்துள்ளனர். அக்காயங்களைத் தொட்டுக் குணமாக்கி, இரக்கத்தின் திருத்தூதர்களாக நாம் ஆகலாம். ஒப்புரவின் கருவிகளாகவும், அமைதியை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்து, உடல் சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களை நாம் புரியலாம்.... என்று கூறினார்.

திருத்தந்தை நம்மிடம் விண்ணப்பிக்கும் இரக்கச் செயல்களை ஆற்றிவரும் நல்ல உள்ளங்களின் வாழ்வு நமக்குத் தூண்டுகோலாக அமைந்து வருகின்றன. நியூயார்க் நகரில், வாழ்ந்து வரும் கண்பார்வை இல்லாத 103 வயது நிரம்பிய லூயிஸ் சிக்னோர் அம்மையார், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவந்தபோது, அவரது வீட்டுவாசலில் சிலர் அவரைத் தாக்கி, காயப்படுத்தியதுடன், அவரிடம் இருந்த பொருட்களையும் களவாடிச் சென்றுள்ளனர். கண்பார்வை இல்லாத நிலையிலும், லூயிஸ் சிக்னோர் அம்மையார், தன்னைத் தாக்கியவர்களை மன்னித்துள்ளார். தனது வாழ்க்கையை, முன்புபோலவே இயல்பாகக் கொண்டுச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது இஞ்ஞாயிறன்று வெளியான ஒரு தகவல். சென்னையில், ஒரு பள்ளியில், ஆசிரியர் ஒருவர், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களிடம்,  நம் நாடு முன்னேற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும் எனக் கேட்டதற்குச் சற்றும் தாமதிக்காமல், ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்த நான்கு மாணவர்களும் ஒன்றாகக் கைகளை உயர்த்தி, சார், வறுமையை ஒழிக்க வேண்டும் என்று பதில் சொல்லி, அதைச் செயலிலும் காட்டியுள்ளார்கள். சென்னை, பெரம்பூர் பகுதியில் ஓர் ஆலய வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வயதான பெண் ஒருவருக்கு, உதவி செய்வதென அந்த மாணவர்கள் முடிவெடுத்தனர். அதற்குத் தங்கள் பள்ளியிடமிருந்து உதவியையும் எதிர்பார்த்தனர். அதுவும் கிடைத்தது. தற்போது, அந்த வயதானவரை, நடைபாதையோரத்தில், ஸ்டேஷனரி பொருள்கள் விற்கும் சிறிய கடையின் உரிமையாளராக ஆக்கியுள்ளனர். இம்மாணவர்களில் ஒருவர் 16 வயது நிரம்பிய அ.செ.ஹரிஹரன். இந்த ஆர்வம் எப்படி வந்தது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு,

“சார், எங்கள் குடும்பத்தினரின் பிறந்த நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில், எங்கள்  அப்பா, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்று ஏதாவது கொடுத்துவிட்டு வருவார். இதைக் கவனித்த நான், அப்பாவிடம் இதற்குக் காரணம் கேட்டேன். இதற்கு அப்பா சொன்னார் – உனக்கு எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்க அப்பா அம்மா இருக்கிறார்கள், ஆனால் இக்குழந்தைகளுக்கு யாரும் இல்லை என்று. எனது பத்து வயதில் கிடைத்த இந்தப் பதிலே, ஆதரவற்றர்கள் மீது இரக்கம் காட்டக் காரணமாக அமைந்தது” என்று ஹரிஹரன் பதில் சொல்லியுள்ளார்.

இந்த நான்கு மாணவர்களில் மற்றொருவர் 16 வயது நிரம்பிய ஆ.ரா.சித்தார்த். இவர் பத்தாம் வகுப்பு முடித்தவுடன், தனது அப்பாவிடம், மருத்துவம் படிக்க ஆசை என்று கூற, அவரின் அப்பா, மருத்துவம் என்பது ஒரு சேவை. பணம் நிறையச் சம்பாதிக்க வேண்டுமென்பது உனது கனவாக இருந்தால், நீ டாக்டர் ஆக வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அப்பாவின் பேச்சிலிருந்த மனிதாபிமானம், மாணவர் சித்தார்த் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதேபோல், வீட்டில் வேலை செய்பவர்கள் கடன் கேட்கும்போது, வீட்டுச்சூழல் எப்படியிருந்தாலும், இவரது அம்மா அவர்களுக்கு உதவும் மனிதாபிமானத்தையும் மனதில் பதித்து விட்டார். சார், நான் மருத்துவம் படிக்கணும், வாரத்தில் ஒரு நாளாவது நோயுற்றவர்க்குச் சேவை செய்யணும், என் மரணத்திற்குக் கண்ணீர் விடுகிற அளவுக்கு, அப்துல் கலாம் ஐயா மாதிரி நல்ல மனிதரா வாழணும் என்று சொல்லியுள்ளார். அடுத்து நம் கவனத்துக்கு வருபவர்கள் கோவை மருதமலை அருகேயுள்ள சோமையம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்-விஜயலட்சுமி தம்பதியர்.

இத்தம்பதியருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். 1987ம் ஆண்டில் திருமணமான இவர்கள், பதினான்கு ஆண்டுகள், குழந்தைக்காகப் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர். குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்து போனது. செயற்கைக் கருத்தரிப்பு போன்ற எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது. இந்நிலையில், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம் என்று முடிவு செய்தனர். ஒரு காப்பகத்தில் இருந்த மூன்று மாதக் குழந்தையை தத்தெடுத்தனர். அஜய் என்று ஆசையோடு பெயரிட்டு வளர்த்தனர். ஆனால், தவழ்ந்து முடிந்து எழுந்து நடக்க வேண்டிய வயதில் அஜய் நடக்கவில்லை, மருத்துவரிடம் காட்டி, நிறைய மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். அஜய்க்கு Cerebral palsy என்ற குறைபாடு இருக்கிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்களின் மூளை, ஐம்பது விழுக்காட்டுக்குக் குறைவாகத்தான் வேலை செய்யும். எடுத்துக்காட்டுக்குச் சொல்வதனால் திறந்த வாயை மூட வேண்டும் என்று மூளைக்குக் கட்டளையிடத் தெரியாது, அப்படியே கட்டளையிட்டாலும் அதைச் செயல்படுத்த கைகால்கள் பயன்படாது என்று மருத்துவர்கள் கூறினர்.

மொத்தத்தில் குழந்தையின் ஆயுள் முழுவதும் உடம்பு வளருமே தவிர மூளை வளராது. அவன் குழந்தையாகவேத்தான் இருப்பான், காலைக்கடன்களைக் கழிப்பதற்கு உதவுவதிலிருந்து இரவில் படுக்கையில் படுக்க வைப்பதுவரை இரண்டு பேர் துணை எப்போதும் தேவை என்ற நிலை. இதனை, குழந்தையைத் தத்து கொடுத்த காப்பகத்திடம் சொல்லும்போது, ஏழு மருத்துவர்கள் கொண்ட குழு, ஸ்கேனிங் உள்ளிட்ட அனைத்துச் சோதனைகளையும் செய்த பிறகுதானே குழந்தையைத் தத்து கொடுத்தோம், எங்கோ தப்பு நடந்துவிட்டது மன்னியுங்கள் சார்.. நீங்கள் உடனே அந்தக் குழந்தையை கொண்டுவந்து எங்கள் காப்பகத்தில் கொடுத்துவிட்டு வேறு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளுங்கள், இதற்குச் சட்டத்திலும் வழியிருக்கிறது என்றார்கள். இதைக் கேட்டவுடன் சுரேஷ் தம்பதியர் கொஞ்சம்கூட யோசிக்கவில்ல. எப்படியும் இந்தக் குழந்தையை வளர்க்க ஒரு பெற்றோர் தேவைதானே, அந்தப் பெற்றோராக நாங்கள் இருந்துவிட்டு போகிறோம் என்று சொல்லிவிட்டனர். அத்தம்பதியர் இப்படிச் சொல்லிக் கொண்டனர்.. இனி நம்மைப் பொறுத்தவரை அஜய்தான் நம் மகன், அவன் கடவுள் கொடுத்த பரிசு. அவனை நல்லபடியாக வளர்க்கவேண்டியது நமது கடமை என்று அவர்கள் முடிவு செய்தனர். அஜய்யை பார்த்துக் கொள்வதற்காகவே தந்தை சுரேஷ் தொழிலை மாற்றிக்கொண்டார். தாய் விஜயலட்சுமி தனது வேலை நேரத்தை மாற்றிக்கொண்டார். அஜய்க்கு வெளியே போவது என்றால் மிகுந்த விருப்பம். இதன் காரணமாக ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் சுற்றுலா செல்கின்றனர். தற்போது அஜய்க்கு வயது பதினான்கு ஆனாலும், இன்னும் அவனுக்கு எதுவும் புரியாது, இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தால்கூட சொல்லத் தெரியாது, பக்கத்தில் படுத்து இருக்கும் நாங்கள்தான் ஈரத்தை உணர்ந்து வேண்டியதைச் செய்யவேண்டும் என்கின்றனர் சுரேஷ் தம்பதியர். இவர்கள் வீட்டிற்கும், அஜய்நிவாஸ் இல்லம் என்றே பெயர் வைத்துள்ளனர். அன்புள்ளங்களே, பத்து மாதம் சுமந்து, எவ்விதக் குறையுமில்லாமல் பெற்றெடுத்த குழந்தையைக்கூட குப்பைத்தொட்டியில் துாக்கி எறியவும், முடியுமானால் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லவும் தயங்காத பெற்றோர்கள் நிறைந்த இந்தப் பூமியில், தாங்கள் தத்தெடுத்த குழந்தை, மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை என்பது தெரிந்த பிறகும், அந்தக் குழந்தைக்காகவே வாழும், கருணை நிறை வாழ்வால், நம்மிடம் பேசும் இத்தெய்வங்களை நாம் வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை. இறைவனையும் மனிதரையும் இணைக்கும் பாலம் இரக்கமே என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். திருமுழுக்கு யோவான் சகோதரிகள் சபையை நிறுவிய அருளாளர் Alfonso Maria Fusco அவர்கள், “எனது நிழல்கூட நன்மை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றார். அன்புள்ளங்களே, இறைவனின் இரக்கத்தை நம் வாழ்வில் எத்தனையோ முறை அனுபவித்திருக்கிறோம். அவரின் அன்பிரக்கமின்றி, இன்று இந்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. தங்களின் இரக்கச் செயல்களால், மனிதரிடையே, பேசும் தெய்வங்கள் பலரை, இன்றும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். எனவே, நம் இரக்கச் செயல்கள் வழியாக, நாமும் அத்தகைய பேசும் தெய்வங்களில் ஒருவராக வாழ்வோம். நம் வார்த்தையிலும், செயலிலும் இரக்கம் நிறையட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.