2016-04-04 15:48:00

திருத்தந்தை: 'ஆம்' என்று சொல்லும் மனிதர்களே, கிறிஸ்தவர்கள்


ஏப்ரல்,04,2016. நாம் 'ஆம்' என்று சொல்லும் மனிதர்களா, அல்லது, அழைப்பைக் கேட்டதும், முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் மனிதர்களா என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில் எழுப்பினார்.

புனித வாரம் மற்றும் உயிர்ப்புப் பெருவிழா காலத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்,  இடம்பெறாமலிருந்த காலைத் திருப்பலியை, ஏப்ரல் 4, இத்திங்களன்று, ஆண்டவர் பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவுடன் மீண்டும் துவக்கியத் திருத்தந்தை, அன்னை மரியா கூறிய 'ஆகட்டும்' என்ற எண்ணத்தை மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.

'ஆம்' என்ற பதிலிறுப்பைக் கூறுவோரின் தொடர், ஆபிரகாமில் துவங்கியது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வயது முதிர்ந்த காலத்தில் அழைக்கப்பட்ட ஆபிரகாமும், தலைமைப் பணிக்கு அழைக்கப்பட்ட மோசேயும், இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால், தங்கள் 'ஆம்' என்ற பதிலை அளித்தனர் என்று குறிப்பிட்டார்.

வானதூதரின் செய்திக்கு, இளம்பெண் மரியா கூறிய 'ஆம்' என்ற பதில், கெத்சமனி தோட்டத்தில், துன்பக் கிண்ணத்தை ஏற்பதற்கு இயேசு கூறிய 'ஆம்' என்ற பதில் வரை தொடர்ந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

நம் ஒவ்வொருநாள் வாழ்விலும், இறைவன் விடுக்கும் அழைப்புக்களுக்கு, 'ஆம்' என்று சொல்லப் போகிறோமா, அல்லது, ஆதாம், ஏவாளைப் போல், நம்மையே மறைத்துக்கொண்டு, 'முடியாது' என்று சொல்லப் போகிறோமா என்ற கேள்வியை, தன் மறையுரையின் இறுதியில் முன்வைத்தார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.