2016-04-04 16:08:00

ஏப்ரல் 24, உக்ரைன் நாட்டு மக்களுக்கென நிதி திரட்டப்படும்


ஏப்ரல்,04,2016. ஐரோப்பாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், ஏப்ரல் 24, ஞாயிறன்று உக்ரைன் நாட்டு மக்களின் துயர் துடைப்பதற்கென நிதி திரட்டப்படுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

ஏப்ரல் 3, இஞ்ஞாயிறன்று புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய 'விண்ணக அரசியே வாழ்க' என்ற நண்பகல் மூவேளை செப உரையில் இந்த விண்ணப்பத்தை விடுத்தார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நடுப்பகுதியில், இவ்வாண்டின் இதயம் போல் அமைந்துள்ள இறை இரக்க ஞாயிறன்று, ஒப்புரவையும், அமைதியையும் தேடி அலையும் மக்கள் மீது என் எண்ணங்கள் திரும்புகின்றன என்று கூறியத் திருத்தந்தை, உக்ரைன் நாட்டில் வன்முறைகளுக்கு உள்ளாகும் மக்கள், தன் உள்ளத்திற்கு நெருக்கமாக உள்ளனர் என்று குறிப்பிட்டார்.

மனதில் நாம் சுமந்திருக்கும் இம்மக்களுக்கு செபங்களை அனுப்பும் அதே வேளையில், அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் செய்வதற்கு, ஐரோப்பாவின் அனைத்து ஆலயங்களும், ஏப்ரல் 24ம் தேதி முன்வர வேண்டும் என்று விண்ணப்பித்தார் திருத்தந்தை.

அமைதியைக் காணமுடியாமல் களைத்துப் போயிருக்கும் உக்ரைன் நாட்டில், எவ்விதத் தாமதமுமின்றி, அமைதியும், நல்வாழ்வும் திரும்பவேண்டும் என்று அனைவரும் அன்னை மரியாவின் வழியே வேண்டுவோம் என்றுகூறி, திருத்தந்தை அவர்கள், தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.