2016-04-02 14:24:00

இது இரக்கத்தின் காலம் : பழிக்குப் பழி, படுகுழியில் தள்ளும்


2015ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, பாரிஸ் மாநகரிலும், புறநகர்ப் பகுதியிலும் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தன் இளம் மனைவியை இழந்த ஒருவர், சமூக வலைத்தளம் வழியே, தீவிரவாதிகளுக்கு எழுதியுள்ள திறந்த மடல் இது:

"வெள்ளிக்கிழமை மாலை, ஓர் அற்புத உயிரை நீங்கள் திருடிக் கொண்டீர்கள். அவர்தான் என் அன்பு மனைவி, என் மகனின் தாய். ஆனாலும், என் வெறுப்பை உங்களால் பெற முடியாது. நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை; நீங்கள் எல்லாருமே இறந்த ஆன்மாக்கள்.

கடவுளுக்காகக் கண்மூடித்தனமாக நீங்கள் கொல்கிறீர்களே; அந்தக் கடவுளின் சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றால், என் மனைவியின் உடலைத்  துளைத்த உங்கள் ஒவ்வொரு குண்டும், அந்தக் கடவுளின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருக்கும்.

முடியாது. என் வெறுப்பைப் பெறும் திருப்தியை உங்களுக்கு நான் தரமாட்டேன். அதைத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்! வெறுப்புக்கு, கோபத்தால் நான் விடையளித்தால், உங்களை ஆட்டிப் படைக்கும் அறியாமைக்கு நானும் அடிமையாகிவிடுவேன்.

நான் பயத்தில் வாழவேண்டும், எனக்கு அருகிலிருப்போர் அனைவரையும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்காது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள். என் பாதுகாப்பிற்காக, என் உள்மனச் சுதந்திரத்தை, பலிகொடுக்க மாட்டேன்.

இப்போது இருப்பது, நாங்கள் இருவர் மட்டுமே, நானும், என் மகனும். ஆனால், உலகின் இராணுவங்களை விட, நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள். என் செல்ல மகன், வாழப்போகும் ஒவ்வோரு நாளும், தன் மகிழ்வாலும், சுதந்திரத்தாலும் உங்களை அவன் அவமானப் படுத்திக்கொண்டே இருப்பான்."

Helene Muyal என்ற தன் இளம் மனைவியை இழந்த, Antoine Leiris என்ற பத்திரிகையாளர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மடல் இது. தெளிவான, துணிவான, உணர்வுகளை வெளியிடும் இம்மடல், வெறுப்புக்குப் பணியமாட்டேன் என்ற உன்னத உண்மையைச் சொல்கிறது. அதேவேளை, பரிவு, இரக்கம் என்ற உண்மைகளுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லாமல் எழுதப்பட்ட மடலோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது. தீவிரவாதிகளின் வெறுப்பு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை, இம்மடல், நேருக்கு நேர் சந்திக்காமல் செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகைய மடலை வாசிக்கும் வன்முறையாளர்களின் வெறுப்பு இன்னும் கூடும் என்று அஞ்சத் தோன்றுகிறது. இருப்பினும், பழிக்குப் பழி, நம்மை படுகுழியில் தள்ளிவிடும் என்பதை, துணிவுடன் எடுத்துச் சொல்லும் Antoine அவர்களுக்கு, நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.