2016-04-02 15:10:00

ஆட்டிசம் குறைபாடுள்ளவர்களுடன் உடன்பிறப்பு தோழமையுணர்வு


ஏப்.02,2016. ஆட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆற்றப்படும் சேவைகள் மேம்பட வேண்டும் மற்றும் இது குறித்த மருத்துவ ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 2, இச்சனிக்கிழமையன்று ஒன்பதாவது உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட நலவாழ்வுத் துறைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள், தனிமைப்படுத்தப்படும் இக்குறைபாடுள்ள மக்களையும், அவர்களின் குடும்பங்களையும் சமூகம் ஏற்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சனைகளின், குறிப்பாக, ஆட்டிசம் குறைபாட்டுப் பிரச்சனையின் மத்தியில் இறைநம்பிக்கையுடன் வாழ்வதற்குப் போராட வேண்டியுள்ளது, ஆயினும், இறைவனில்  நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் பேராயர் Zimowski அவர்களின் செய்தி கூறுகிறது.

மத நம்பிக்கையாளர், மத நம்பிக்கையற்றவர் என்ற வேறுபாடில்லாமல், நாம் எல்லாரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பைப் பின்பற்றி, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஆட்டிசம் குறைபாடுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை, உடன்பிறப்பு தோழமையுணர்வுடன் ஏற்க வேண்டுமெனக் கூறியுள்ளார் பேராயர் Zimowski.

ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். இது, மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சுத்திறன், சமுதாயத் தொடர்பு மற்றும் புலனுணர்வு ஆகியவற்றைப் பாதிக்கும் நோயாகும். குழந்தை பிறந்து 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும். இக்குறைபாட்டை 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.