2016-04-01 15:17:00

புலம்பெயர்ந்தோருக்காக திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


ஏப்ரல்,01,2016. "புனிதக் கதவு வழியே கடந்து செல்லும்போது, நம் வாழ்வை மாற்றக்கூடிய இறைவனின் அருளில் நம்பிக்கை கொள்வோம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 1, இவ்வெள்ளியன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

@pontifex என்ற முகவரியுடன், ஒவ்வொரு நாளும் எட்டு மொழிகளில் திருத்தந்தை வெளியிட்டுவரும் டுவிட்டர் பதிவுகளில், மார்ச் 31ம் தேதி, வியாழனன்று அவர் வெளியிட்டச் செய்தி, நாடுவிட்டு நாடு செல்வோரை மையப்படுத்தி அமைந்திருந்தது.

"நாடுவிட்டு நாடு மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் நிலை, தீவிரமான கலாச்சார கேள்வியாக மாறி, நம் பதிலிறுப்பை எதிர்பார்க்கிறது" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட வியாழன் டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

கடந்த வாரம் சிறப்பிக்கப்பட்ட புனித வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து, அவர்கள் காலடிகளைக் கழுவியது, புனித வெள்ளியன்று நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில், திருத்தந்தை கூறிய செபத்தில், புலம்பெயர்ந்தோரைக் குறித்து மன்றாட்டு எழுப்பியது ஆகியவை, இப்பிரச்சனை குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.