2016-04-01 14:58:00

கர்தினால் Cottier மரணம், திருத்தந்தை இரங்கல்


ஏப்ரல்,01,2016. கர்தினால் Georges Marie Martin Cottier அவர்கள் மரணமடைந்ததையொட்டி, அவரின் சகோதரி Marie Emmanuelle PASTORE COTTIER அவர்களுக்கு, தனது அனுதாபத்தையும், செபத்தையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித தொமினிக் சபையைச் சேர்ந்த கர்தினால் Martin Cottier அவர்கள், கலாச்சாரத்திற்கும், திருஅவைக்கும், திருத்தந்தையருக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகளுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ள திருத்தந்தை, கர்தினால் அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய, அன்னை மரியா மற்றும் புனித தொமினிக் அவர்களின் பரிந்துரையைக் கேட்பதாகவும் கூறியுள்ளார்.    

கர்தினால் Martin Cottier அவர்கள், மார்ச் 31, இவ்வியாழன் இரவு, தன் 94வது வயதில் இறையடி சேர்ந்தார். சுவிட்சர்லாந்து நாட்டில், 1922ம் ஆண்டு, ஏப்ரல் 25ம் தேதி பிறந்த Martin Cottier அவர்கள், தன் 23வது வயதில் தொமினிக்கன் துறவு சபையில் இணைந்து, 29வது வயதில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற Martin Cottier அவர்கள், ஜெனீவா பல்கலைக் கழகத்தில் பேராசியராகப் பணியாற்றிய வேளையில், மொன்ட்ரியால், பாரிஸ், பதுவை, ஆகிய இடங்களில் பகுதிநேரப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மத நம்பிக்கையற்றவர்களுடன் உரையாடல் என்ற கருத்தில், இரண்டாம் வத்திக்கான் சங்கம் மேற்கொண்ட விவாதங்களில், அருள்பணி Martin Cottier அவர்களும் உதவியாக இருந்தார்.

1990ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், அருள்பணி Martin Cottier அவர்களை, பாப்பிறை இல்லத்தின் இறையியல் ஆலோசகராக நியமித்தார்.

திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாடு பேராயத்தின் ஆலோசகராகவும், ஏனைய திருப்பீட அவைகளில் உறுப்பினராகவும் பணியாற்றிய பணியாற்றிய அருள்பணி Martin Cottier அவர்கள், 2003ம் ஆண்டு பேராயராகவும், பின்னர், அதே ஆண்டு கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.

2005ம் ஆண்டு முதல், பாப்பிறை இல்லத்தில் தங்கியிருந்த கர்தினால் Martin Cottier அவர்கள், இவ்வியாழன் இரவு, உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் இறையடி சேர்ந்தார்.

கர்தினால் Martin Cottier அவர்களின் அடக்கத் திருப்பலி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில், ஏப்ரல் 2, இச்சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, கர்தினால் ஆஞ்செலொ சொதானோ அவர்கள் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் Cottier அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 215 ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைவர்களின் எண்ணிக்கை 116 ஆகும். மேலும், தற்போதுள்ள மூன்று சுவிட்சர்லாந்து நாட்டுக் கர்தினால்களில் ஒருவரே  திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய வயதைக் கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.