2016-03-31 16:15:00

தமிழகத்தில் காணாமல்போகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


மார்ச்,31,2016. தமிழகத்தில் தினமும் இரண்டு சிறார்களுக்கும் அதிகமானவர்கள் காணமால் போவதாக வந்துள்ள தகவல் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

ஊடகச் செய்தி ஒன்றின் அடிப்படையில் தன்னிசையாக நடவடிக்கையை முன்னெடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநிலத்தில் காணாமல் போகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 271 சிறார்கள் காணாமல் போயுள்ளனர் என அந்த ஆணையம் கூறுகிறது.

காணாமால் போகும் சிறார்கள் வறிய நிலையிலுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அது குறித்து காவல்துறையினர் தீவிரமான விசாரணைகளை முன்னெடுப்பதில்லை எனக் கூறி, அதற்கான விளக்கத்தை, நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக அரசிடம் கேட்டுள்ளது.

சிறார்கள் காணாமால் போவது குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகத் தகவல்களை மேற்கோள் காட்டியுள்ள அந்த ஆணையம், 2014ம் ஆண்டு 441 சிறார்கள் காணமால் போயுள்ள நிலையில், 2015ம் ஆண்டு அது 656ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

பாலியல் தொழிலில் தள்ளுவது, சட்டவிரோதமான வகையில் தத்தெடுக்கப்படுவதற்கு துணைபோவது ஆகிய நோக்கங்கள் உட்பட பல காரணங்களுக்காக சிறார்கள் கடத்தப்படுகிறார்கள் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.