2016-03-31 14:59:00

இயேசுவின் போதனைகள் அனைத்தின் மையம், இரக்கமே


மார்ச்,31,2016. இயேசுவின் போதனைகள் அனைத்திலும் மையமாக விளங்குவது, இரக்கமே என்று, வியென்னா கர்தினால், Christoph Schönborn அவர்கள் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கூட்டத்தில் கூறினார்.

மார்ச் 31, இவ்வியாழன் முதல், ஏப்ரல் 4, வருகிற திங்கள் முடிய வத்திக்கானில் நடைபெறும் அப்போஸ்தலிக்க இரக்கத்தின் ஐரோப்பிய மாநாட்டில், அப்போஸ்தலிக்க இரக்க உலக இயக்கத்தின் தலைவரான கர்தினால் Schönborn அவர்கள், இம்மாநாட்டின் துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

இறைவனின் தாய்மை நிறைந்த இரக்கம் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, கர்தினால் Schönborn அவர்கள் வழங்கிய உரையில், திருப்பாடல் 23ல் கூறப்பட்டுள்ள 'அருள் நலமும், பேரன்பும்' என்ற சொற்கள் இறைவனின் இரக்கத்தை சித்திரிக்கும் சிறந்த வார்த்தைகள் என்பதை எடுத்துரைத்தார்.

இயேசுவின் போதனைகள், புதுமைகள் பலவற்றை தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் Schönborn அவர்கள், துன்பங்களைக் கண்டவுடன் அவற்றைவிட்டு விலகிச் செல்லாமல், அவற்றை நோக்கிச் சென்று, துன்பங்களைக் களைவதே, கிறிஸ்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.