2016-03-30 16:02:00

கடத்தப்பட்ட அருள்பணியாளர் உண்மைநிலை அறிய வேண்டுகோள்


மார்ச்,30,2016. ஏமன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அருள்பணியாளர், தாமஸ் உழுன்னலில் (Thomas Uzhunnalil) அவர்கள் கொல்லப்பட்டுள்ளார் என்று பரவிவரும் வதந்திகளைத் தடுக்க, இந்திய அரசு, அருள்பணியாளரைப் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிந்து விரைவில் தெரிவிக்கவேண்டும் என்று, இந்திய ஆயர்கள், அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய ஆயர் பேரவையின் இணைச் செயலராகப் பணியாற்றும் அருள்பணி ஜோசப் சின்னய்யன் அவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் அவர்களையும், ஏனைய அதிகாரிகளையும் இச்செவ்வாயன்று சந்தித்துப் பேசினார் என்று, ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.

இந்திய அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து இந்திய ஆயர் பேரவை சார்பில் அனுப்பப்பட்டுள்ள ஒரு மடலில், பரவிவரும் வதந்திகளைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு விரைவில் செயல்பட்டு, உண்மை நிலவரத்தைக் கூறவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

இதற்கிடையே, தெற்கு அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றும் பேராயர் பால் ஹிண்டர் அவர்கள், சமூக வலைத்தளங்கள் வழியே இதுவரை பரவி வந்துள்ள தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ஆஸ்திரிய நாட்டின், வியென்னா கர்தினால் Christoph Schönborn அவர்கள், அருள்பணி உழுன்னலில் அவர்கள் கொல்லப்பட்டார் என்று தான் கூறிய செய்தி தவறு என்று கூறி, மறு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று, ஆசியச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் :  UCAN  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.