2016-03-30 15:34:00

இது இரக்கத்தின் காலம்... – கருத்து உணர்த்தப்படவே வார்த்தைகள்


சுவாங் ட்ஸு என்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன மேதை, ஜென் துறவி. ஒருமுறை அவருடைய சீடர் ஒருவர், “குருவே, நீங்கள் எத்தனையோ பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுடைய மனதைக் கவர்ந்தவர் யார்?” என்று கேட்டார்.

சுவாங் ட்ஸு சிரித்தார். “வார்த்தைகளை மறந்த ஒருவரே, என்னுடைய மனதைக் கவர்ந்தவர். அப்படிப்பட்ட ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை” என பதிலளித்தார் மேதை.

“புரியவில்லையே!” என சீடர் முழிக்க, சுவாங் ட்ஸு விளக்கத் தொடங்கினார். “நீங்கள் ஓர் இடத்திற்குச் செல்ல பயணச்சீட்டு பதிவு செய்கிறீர்கள். பயணம் முடிந்தபின் அந்தப் பயணச்சீட்டை என்னச் செய்வீர்கள்?” என அவர் கேட்க,

“தூர வீசிவிடுவோம்!” என்றார் சீடர்.

“ஆக, பயணச்சீட்டு தூர வீசப்படும்வரை, அந்தப் பயணம் முடிக்கப்படவில்லை என்று அர்த்தம். இல்லையா?” என துறவி கேட்க, “ஆமாம் குருவே!” என பதிலளித்தார் சீடர்.

“அதேபோல், பாட்டிலில் இருக்கும் மருந்தைப் பயன்படுத்தி முடிந்தவுடன், பாட்டிலைத் தூர வீசிவிடுகிறோம். இல்லையா?” என சுவாங் ட்ஸு கேள்வி கேட்க, “உண்மைதான். அதற்கென்ன?” என்றார் சீடர்.

“பயணச்சீட்டு மற்றும் பாட்டில் போலதான், நாம் பேசும் வார்த்தைகளும். அவை உயர்ந்த கருத்துகளைக் கொண்டுசெல்லும் வாகனங்கள். நாம் அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன், வார்த்தைகள் மறந்துபோகும். ஆனால் நான் சந்தித்த எவரும் வார்த்தைகளை இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து அவற்றோடுதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் உலகப் பேருண்மைகளை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?” என்றார் சுவாங் ட்ஸு. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.